Translate

மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூன், 2014

என்னிடம் பிறந்த நாள் பிறந்ததும் வளர்ந்ததும் ....

ஸ்கூலுக்கு கெளம்பற காலை அவசரத்துல எவர்சில்வர் தட்டுல 'லேக்டோ கிங்' சாக்லேட் வைச்சு பக்கத்தூட்டு ராஜேஷ்  தந்த போதுதான் எனக்கு  பிறந்த நாள் அறிமுகம் ஆனது. அந்த சாக்லேட்ட எனக்கு கையில் ஒன்றை தந்தும் அப்பாக்கு முழு தட்டுமாக நீட்டுவான்.அவர் நாசூக்காக ஒன்றை மட்டும் எடுத்து கொள்வார். என்னிடமும்  தட்டோட நீட்டிருக்கலாம் ....

காதல்னு ஒரு பருவத்துக்குள் வந்த போதுதான் பிறந்த நாளும் காதலும் எவ்வளவு அபரிதமான காதல் கொண்டது என புரிய வந்தது.அவளுடான முதல் நாள் சந்திப்பே அவளோட பிறந்த நாள் என்பதால் கிப்ட் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம்.

ஹார்லிக்ஸ்சாப்பிட்டுக்கோப்பான்னு நாகர்கோவில்ல ரத்தம் கொடுத்ததுக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்தத தூக்கிட்டு கிப்ட் கடைக்கு ஓடினேன்.பதினெட்டு வயசு தீவிர  காதலை  விட வெறித்தனமான விலையில் ஒரு போட்டோ ஸ்டாண்ட் ஒன்றை எடுத்து சருகத்தாளில் பொதிந்து கொடுத்ததுதான் நான் கொடுத்த முதல் பிறந்த நாள் பரிசுன்னு சொல்லலாம்.
அப்புறமா ஒரு நாள் அந்த கிப்ட்  அவங்க  அம்மாவின் கோபத்திற்கு அடுப்புக்கு வாக்கப்பட்டு போனதுலாம் காலக்கொடுமை.

அண்ணன் ,காதலி இருவரும் சென்னைக்கு வேலைக்கும் படிக்கவுமாக வந்த போதுதான் அவர்களுக்கும் அவர்கள் மூலமா எனக்கும் பிறந்த நாள் என்பது  கூடுதல் கலையானது.ஆமா பின்ன வாழ்த்துக் கவிதைன்னு அவங்க ப்ரெண்ட்ஸ்க்குலாம்  பொளந்து கட்டினேன்.அவங்க எல்லாரும் நல்லவங்க என்பதால் சேதமில்லாமல் பிழைத்து கொண்டேன்.

காஸ்மீரில் இருந்த காலத்தில் கிரீட்டிங் கார்டும் கடிதமும்  வர காத்திருந்த காலங்கள் தவிப்பானவை.வந்தாலும் ஒளித்து வைத்து  தவிக்க விட்டு பார்ப்பானுங்க பக்கிங்க..இன்று வரை நட்பு தாண்டி குடும்பத்தில் ஒருத்தியாக நிற்கும் நிஷா என்ற தோழியின் இருபத்தெட்டு பக்க கடித வாழ்த்தெல்லாம் சும்மா கல்வெட்டில் வைத்திருக்க வேண்டிய நிகழ்வுகள்.

குறிப்பா காஸ்மீரில் 2002ல் இருந்த போது பிறந்த நாளன்று கம்பெனி கமாண்டர் ரோந்துக்கு அழைத்து சென்றார்.ரோந்து செல்வதில் கைடாக இருப்பது இன்வைட்டடு வம்பு என்பதால் வழி தெரியாது என்று சிலர் பின் வாங்க கோபத்தில் கமாண்டர் வயல் பக்கமா கூட்டிட்டு போய் ,பயர் வருது ,எதிரி அட்டாக் செய்றான்  ஊர்ந்து போங்க ..உருண்டு போங்க ....குட்டிக்கரணம் அடிங்கன்னு மூதாயர் பொறந்த நாளையெல்லாம் சேர்த்து கொண்டாட வைச்சதுலாம் மறக்கவே முடியாது.புது யூனிபார்ம் போடலைன்னாலும் அன்னைக்கு புது ஜட்டி..புது பனியன் போட்ருந்தேன்.ஒரே சகதியும் கண்ணீருமாய் கடந்த அந்த நாள் இன்று சிரிப்பாக இருக்கிறது.

அப்புறமா காதலி மனைவியான பின்னும் முன்னும் அவளுடைய பிறந்த நாள்  ஆர்ச்சீஸ் கேலரியை கற்பழிக்கும் வழக்கத்தோடு ரத்தம் கொடுக்கும் வைபோவமாகவும்  மாறிக்கொண்டது. காதலியாக இருந்தப்பவும் சரி ...மனைவியாக இருந்தப்பவும் சரி...என்னோட பிறந்த நாளை மறப்பதில் அந்தப்புள்ளைக்கு அவ்வளவு சந்தோசம். ஆகச் சிறந்த அந்த கால கட்டத்தில் போன் வெடிக்கும் அளவிற்கு ரகளையான சண்டைகள் எனக்குண்டான பிறந்த நாளை எனக்கே வெறுக்க வைத்திருந்தன.

பிறந்த நாள் என்றால் சிறுவயது போலவே மறுபடி ஒரு வெத்து காகிதமா மாறி மற்றவர்களுக்கு வாழ்த்து அனுப்பி மட்டுமே நகர்ந்த வேளையில்தான் மார்க் அறிமுகம் ஆனார்.அவர் மூலமா பலர் அறிமுகமானார்கள்.வாத்தி ராஜா,அரசன்,சீனு,வசு என நண்பர்கள் காமெடி கும்மியில்  பதிவெழுதி கலாய்த்து பிறந்த நாளை கொண்டாடிய போதுதான் பிறந்த நாள் என்றால் வாயில் வடியும் சிரிப்போடு கடந்து கொண்டிருக்கிறேன்.

இந்த வருடமும் உறங்காமல் போனிற்கு காத்து கிடந்து காலையில் முழித்தால் இலியாஸ் தமது  நண்பரிடம் சொல்லி மெனெக்கெட்டு போட்டோ ரெடி செய்து ஆட்டுக்கு மஞ்ச தெளித்து ஆரம்பித்து வைத்த பின்தான் மனாளினிக்கே மறந்து போனது நியாபகம் வந்திருக்கு.

ஒரு வேளை வயதாகிவிட்டே போகிறது,மரணத்தை நோக்கி செல்கிறோம் என்பதை மறைக்கத்தான் இப்படி கொண்டாடி கொள்கிறோமோ என தெரியவில்லை.செலவே இல்லாமல்....நேரில்  சந்திக்காமல்...முகம் பார்க்காமல் சத்தமாக சிரித்து கொண்டாட இத விட வேறு முகவரி கிடைத்து விடுமா என்ன?

இது வரை கேக் வெட்டியதில்லை. இன்னும் எனக்கு ஹேப்பி பெர்த் டே டூ யு பாடல் முழுசா தெரியாது. அந்த கீறல் விழுந்த ரெக்கார்ட் ப்ளேயரை விட கெடா வெட்டும் பிரியாணியுமா வாயிலேயே வட சுடும் நண்பர்களின் கமெண்ட்ஸ் எவ்ளோ துன்பமானாலும் மறக்கடிச்சுடும்.நாளைக்கே சாவு என்றாலும் கூட ரெண்டு ஸ்டேட்டஸ் போட்டு கமெண்ட் பார்த்து சிரிச்சிகிட்டே சாகலாம் என்கும்போது வாழ்வதற்கு சொல்லவா வேணும் ?

இன்பாக்ஸ்ல் ,டைம் லைனில்,செல்பேசியில் என்று என்னை திக்கு முக்காட செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல இயலாது.வணங்கி கொள்கிறேன்.வணக்கம்.



வெள்ளி, 31 மே, 2013

மீண்டு(ம்) மீண்டு(ம்) வருவேன் -தீவிரவாதி

நான்கு மாதங்களுக்குப் பின் மீண்டும் வந்துள்ளேன் நண்பர்களே,சொல்லி கொண்டு செல்ல கூட காலம் கொடுக்காத அவசர கோலத்தில் சென்றதால் எந்த ஒரு தகவலும் தர இயலவில்லை.மன்னிக்கவும்.முதலாம் பிறந்தநாளை நினைத்து பார்க்க கூட மறந்து விட்டது இந்த வலைப்பூ. 

எல்லை பாதுகாப்பு படையில்  ராஜஸ்தான் ஜோத்பூரில் ஐந்து வருட INSTRUCTOR பணி காலம் முடிந்து ஜம்மு சாம்பா -பாக் எல்லையில் காவலுக்கு  போக ஆர்டர் வந்த போது சற்று அயற்சியாகதான் இருந்தது.முக நூலிலும் வலைதள உலகத்திலும் மெல்ல தவழ்ந்து எழும் போது நச்சுன்னு முதுகுல குத்தி முடக்கி போட்ட மாதிரி பீலிங்.

ஏன்னா எல்லைல இந்த லேப் டாப்,மொபைல் செயல்கள் புரிய கமாண்டர் ஒத்துகிட்டா கூட காலம் ஒத்துகிடாது,காலம் ஒத்துகிட்டா கூட கடன்கார சிக்னல் ஒத்துக்காது..ஐந்து வருடத்திற்கு முன் ஒரு இரவு கூட நிம்மதியாக முழு உறக்கம் உறங்காத நினைவுகள் சற்று பயம் காட்ட  ஆரம்பித்தன.

டெல்லில இருந்து அழுத்தம் காரணமாக  என்னை பயிற்சி பள்ளி  அவசரமாக விரட்டியதாலோ என்னவோ ஓடி ஓடி பயிற்சி கொடுத்த மைதானத்தை கடக்கும் போது முதன்முதலா மிக நீளமாக தோன்றியது.

அவசரமாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு அதே அவசரமா ரயில் ஏறினால் பருத்திவீரன் பிரியாமணி மாதிரி எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்டானு அழும் மனைவிக்கு நடுவில் யப்பா,நீ இப்போ போறீயே என் சைக்கிளை யார் சரி பண்ணி கொடுப்பா?ன்னு கேக்கிறான் பையன்....அவனுக்கு அவன் கஷ்டம்....

காலை  எழுந்ததும் முக நூல்,புதுபுது அர்த்தங்கள்,சன் மியூசிக்,நேர்பட பேசு சனிக்கிழமை இந்தி சினிமா,அப்பப்ப ஒரு பதிவுன்னு  இருந்துட்டு வேலி கம்பியும்,ஆளுயர புற்களும்,நரிகள்,பாம்புகள்,மான்கள்,பன்றிகள் என்று சட்டென்று ஒரு ஆதிகால வாழ்வுக்கு திரும்பிய போது சங்கடமாகத்தான் இருக்கிறது...ஆனாலும் என்ன செய்ய? சங்கடமில்லா வாழ்க்கையும் சதுரமான முட்டையும் சாத்தியமில்லையே ..

ஒரு ஓரமான காட்டுக்குள் இருந்து என்னை முடக்கி கொள்ள எனக்கு விருப்பமில்லை...மனைவி மக்களை தேடுவது போல பதிவிட, பதிவுகள் படிக்க, பாராட்ட,எதிர்வினை ஆற்ற பாய்கிறது மனம்.

இந்தப்பதிவுலகில் கற்போம்  தளம் மூலம் தமிழில் டைப் செய்ய வெளிச்சம் போட்ட பிரபுவும்,அலங்கோலமாய் கிடந்த என் தளத்தை ஒழுங்கு செய்து அழகு செய்த பிளாக்கர் நண்பன் அப்துல் பாஸித் அவர்களும்  வணக்கத்திற்கு உரியவர்கள் என்றால் மிகை அல்ல..

இவர்களை மீறி நான் கதை எழுதுவேன் என்று என்னை நம்பி முதலாம் மூன்றாம் பதிவு முதல் இப்போது வரை ஆதரித்து,அறிவுரை கொடுத்து எனது தளத்தை பல தளங்களுக்கு எடுத்து செல்லும்  எனது ஆசான்,அன்புத்தம்பி,இலக்கிய சித்தன் ,கண்ணாடி மச்சான் என்று கவிதாவால் அன்போடு அழைக்கப்படும்
அன்பு தம்பி திடங்கொண்டு போராடு சீனுவை  நன்றி சொல்லி சுருக்கி கொள்ள விரும்பவில்லை.

தொலைபேசியில் எங்கோ வெளிநாட்டில் இருந்து இரவு ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய மூத்த பிரபல பதிவர் பாசமிகு கோவை முத்தரசு அண்ணனை,அரைநாள் முழுவதும் காதலியை போல சலிப்பில்லாமல் பேசிய கரை சேரா அலை அரச ன் ஐயும்,காமெடி கும்மி  மூலம் என்னை சிரிக்க சிரிக்க வைத்த ஹாரி,வாத்தியார் ராஜா ,பிளேடு பீடியா கார்த்தி ,வரலாற்று சுவடுகள் போன்ற பல நல்ல உள்ளங்களையும்   எனக்கு தந்த இந்த பதிவுலகை விட்டு விட எனக்கு முடியவில்லை.

கால இடைவெளிகள் மட்டுமே பிரச்சனை ஆனாலும் எனது பதிவுகள் தொடர்ந்து வரும்.

காஷ்மீர் பதிவுகள் என்னை பல இஸ்லாமிய நண்பர்களிடம் சேர்த்துள்ளது.காஷ்மீர் மக்கள் இஸ்லாமியர்கள் என்பதாலும்,அவர்களை வைத்து பாக் மீன் பிடிக்கிறது என்பதாலும் அவர்களின் உரிமை போராட்டத்திற்கு மத சாயம் பூசுவது என்னால் முடியாது.அடக்குமுறை அதிகாரத்தில் அவதி கொள்ளும் வடகிழக்கு,சட்டிஷ்கர் பூர்வ குடி மக்கள்,காஷ்மீரத்து மக்கள் மூவருக்கும் என்னிடம் வித்தியாசம் எதுவுமில்லை.

இன்னுமொரு வாய்ப்பு காஷ்மீரில் பணி செய்ய வாய்ப்பிருந்தால்,சட்டிஸ்கரில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தால்  காணொளி
ஆதாரங்களோடு உங்கள் முன்னே எனது பதிவுகள் பேசும்.

வருடத்தில் இருமாதம் ,மற்றும் பதினைந்து நாள் விடுமுறையில் மனைவி,பிள்ளைகள்,நண்பர்கள்,உறவினர்கள்,பெற்றோர் என அனைவரையும் தாண்டி இங்கு பதிவிட வருவது எனக்கு சுலபமில்லை...ஆனாலும் வருவேன்.... மீண்டும் மீண்டும் வருவேன்.....உங்கள் ஆதரவோடு.....

-என்றென்றும் அன்போடும்,நன்றியோடும் உங்களின் அரசப் பயங்கரவாதி./தீவிரவாதி

அடுத்த பதிவு நீங்கள் காணாத இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் புற படங்களுடன்........

ஒவ்வொரு பதிவிலும் என்னை போல ஒரு புதிய பதிவரை எனது தளத்தில் அடையாளம் செய்வேன் என்று கடந்த பதிவில் ஆரம்பித்தேன்....எந்த பதிவுகளையுமே படிக்காமல் சட்டென்று வேண்டுமென்று ஒருவரை இங்கு சடங்காக அடையாளம் செய்ய விரும்பவில்லை...எனவே விடுமுறை....!!







புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூபமெடுத்த நான்கு கூமுட்டைகள் - ஆராய்ச்சிப் பதிவு


நான் (இ வா தமிழன்) அனி குட்டன் (பெரியாறு பங்காளி ) நாயக் (காவேரி பங்காளி ) நாயுடு (பாலாறு பங்காளி ) நாங்க நால்வரும் நண்பர்கள்....உச்சா போகணும்னா கூட ஒன்னாதான் போவோம்னு சொல்ல முடியாது என்றாலும் சரக்கடிக்கவும் சண்டை போடவும்  கட்டாயம் இந்த திராவிட நட்பு கூடி விடும்.

இந்த கூட்டத்தில் சரக்கடிக்காமல்,நடப்பன பறப்பன ஊர்வன நீந்துவன போன்றவற்றை நான் மட்டும் சாப்பிட மறுப்பதால் முட்டை மட்டும் சாப்பிடுவதால் எனக்கு இனத்துரோகி(மதராசி) என்று நாமம் உண்டு.(எங்கே போனாலும் இப்படித்தான் சொல்றாங்க )

குடியரசு தின சிறப்பு விருந்தாக இரண்டு மூன்று கோழிகள் உரிக்கப்பட்டு உலை வைக்கும் நேரத்தில் கோழி மீன் ஆடு மாடு பன்னி புறா பூனை என்று என் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடாத எனக்காக  ஆம்லேட் போடும்போதுதான் அந்த கேள்வி எழுந்தது....முட்டை வெஜ் ஜா? நான் வெஜ் ஜா?

அடிக்கும்  போதை இறங்கும் முன்னேயே ஆரம்பமானது அலப்பறை ஆராய்ச்சி.

அனிதான் ஆரம்பித்தான்  இதுக்கு மொதல்ல ஆன்சர சொல்லு நீ ...
எதுக்கு? முதல்ல கேள்விய கேளுடா முண்டம்..
இவரு முட்டை சாப்புடுவாறாம் ஆனா கறி மீனுன்னா சாப்புட மாட்டாறாம்...அப்படின்னா நீ வெஜ்ஜா நான்- வெஜ்ஜா ?

கேள்விக்கு பதில் சொல்ல கூடாதுன்னா பதில் கேள்வி கேக்கணும் என்கிற இலக்கணம் தவறாமல் நான் கேட்டேன் முட்டை  என்பது சைவமா? அசைவமா? 

உசுரோட உள்ளத கொன்னாத்தான் அசைவம்...முட்டைக்கு உயிர் கிடையாது
அதனால அது சைவம் என்று சும்மனாச்சும் கன்னட  நாயக்  கண்ணடிச்சு கலவரத்துக்கு சுழி போட்டதும் விஸ்வரூபமெடுத்தது ஆராய்ச்சி.

அது எப்படி உயிரில்லன்னு சொல்றே..அதுக்குள்ளே ஒரு உயிர் இருக்கு அதனால அது அசைவம்தான்னு ஆந்திரா நாயுடு  ஆவேசமாகவும்   எனக்கு நல்லா புரிஞ்சிடுத்துச்சு...இன்னிக்கு சாப்பாட்டுக்கு சங்குதான் :) 
கேரளா  அனிகுட்டன் நாயுடுவை பார்த்து அது எப்படிடா முட்டைக்கு உயிர் இருந்தா அது நடக்கணும் கத்தனும் கடிக்கணும் ஒண்ணுமே இல்லைனா வாலாவது ஆட்டனும் ...எதுவுமே இல்லாமா எப்படிடா நீ முட்டைக்கு உசுர் உண்டுன்னு சொல்லலாம்?( மில்லியன் டாலர் கேள்வி )

கன்னட நாயக்  கிளப்பி விட்டாரு அடுத்த கேள்விய..தாவரத்துக்கு உயிர் உண்டா?
கேரளா குட்டன் பட்டுன்னு ஆமா உண்டுன்னு வாயை விட ...அது மட்டும் நடக்கவா செய்யுது ?இல்ல குதிக்கத்தான் செய்யுதா? தாவரத்திற்கு உயிர் உண்டென்றால் முட்டைக்கும் உயிர் உண்டு.கன்னடம்  பெருமிதமா டிக்ளேர் செய்தது.(மில்லியன் டாலர் பதில்)

சற்றே ஆடிப்போன சேட்டன்  பட்டென்று கேட்டது பாருங்க  ஒரு கேள்வி அப்படின்னா தாவரமும் அசைவம்தானே?
உசுரோட உள்ளத கொன்னு தின்னா அசைவம்னா தாவரமும் உசுர்தான்யா...என்னப்பு சொல்றீங்க? #@$&!@

சிந்தனையை தூண்டியதில் ஆந்திரா நாயுடுக்கு  பளிச் என்று ஒரு எண்ணம்....எது ரத்தம் சிந்துதோ அதுதான் அசைவம் ..ரத்தம் இல்லாதது சைவம்.பயபுள்ளைக்கு உடம்பெல்லாம் மூளை.

சேட்டன்  விட்டாத்தானே... அப்படின்னா பால் என்பது சைவமா? அசைவமா?

அதுல எந்தோடா பிரச்சினை?அது சைவம்தன்னே என்று அமைதி செய்தால் கேட்டாத்தானே 

பால் என்பது பசுவின் ஒருவகையான ரத்தம் போலத்தான்....எனவே பால் அசைவம் என்று அறிவிக்கப்படவேண்டும்.என்னை என்ன படிக்காதவன்னு நினைச்சிங்களா?பிளஸ் டூ பாஸ் தெரியும்ல...சேட்டன் படிப்பாளி.

ம் ஹூ ம் நாங்க யாரும் ஒத்துக்கல...பால் என்பது சைவமே..அப்படின்னா சைவம் ,அசைவம் என்பதை எதைக் கொண்டு பிரிக்கலாம்? அர்த்தப்படுத்தலாம்?

ரெண்டு மூணு ரவுண்டுக்கு பின்னர் கன்னடத்தான் ஒரு அற்புதமான கருத்தை முன் வைத்தார்.மிருகங்களை கொன்று விட்டால் அவை திரும்பி வருவதில்லை...தாவரங்கள் அப்படியில்லை திரும்ப திரும்ப தந்து கொண்டே இருக்கும் எனவே தாவர இனம் சைவம்...இறந்து போகும் மிருகங்கள் அசைவம்.

அது எப்படி சரியாகும்?மிருகங்க்ள கூடத்தான் குட்டி போட்டு குட்டி போட்டு உணவு தருகிறது.அதனால இது செல்லாது செல்லாதுன்னு  மொத்த விஞ்ஞானிகளும் கவுண்டர கொடுக்க  ஒரே யோசனை..

நீங்களே சொல்லுங்க பாஸ் சைவம்னா எது?அசைவம்னா எது?எதை வைத்து பிரிக்கலாம்?

கட்ட கடைசியில் காவேரி இப்படி ஒரு பாயிண்ட்டை வைப்பான்னு எதிர்பார்க்கவே இல்ல.அதாகப்பட்டது 
பிராமணர்கள் எதை எல்லாம் சாப்பிட்டாங்களோ சாப்புடுறாங்களோ அதுலாம் சைவம்.
எதையெல்லாம் சாப்பிடல்லியோ அதுலாம் அசைவம்.

நான் ஒத்துகிடலயே  சேட்டனும்  ஒத்துகிடல...அப்படின்னா வெங்காயம் பூண்டை கூடத்தான் பிராமணர்கள் சாப்பிடுவதில்லை அதுலாம் கூட அசைவமா?

பிராமணர்கள் பால் குடிக்காங்க முட்டை சாப்பிடுவதில்லை...அதனால அவங்க உணவு முறையெல்லாம் இதுக்கு விடையாகாது.அதிலும் வெளிநாட்டில் எவரை வைத்து அர்த்தம் கொள்வது?

ஒரு கிழட்டு மங் (OLD MONK)பாட்டில் முடியும் போது ஜன்னலுக்கு வெளியே மேய்ந்து கொண்டிருந்த மாட்டை வைத்து அடித்து விட்டேன் "ஆடு மாடு சாப்பிடும் இலை தழை இதர இதரவெல்லாம் சைவம்... மிச்சம் எதுலாம் உள்ளதோ அதுலாம்  அசைவம்"

ஏறின போதை இறங்க கூடாது என்ற நல்லெண்ணமா இல்லை பாட்டில் காலியான நேரமா தெரியவில்லை  என் வில்லேஜ் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளை நிறுத்தி கொண்டனர். திரும்பவும் என்னைக்கு ஆரம்பிப்பாங்களோ தெரியல....நீங்க என்ன சொல்றீங்க?

என்னது சரக்கடிச்சிட்டுதான் சொல்வீங்களா? மது அருந்துவது நாட்டுக்கும் வீட்டுக்கும்  உடல்நிலைக்கும் கேடு.


சில முக்கிய குறிப்புகள் :
ஆராய்ச்சி நடத்திய நாங்கள் நால்வருமே நான்கு மாநிலத்தை சேர்ந்தவர்களே.

இது முழுக்க முழுக்க கற்பனை கதை இல்லை.

மதியம் முதல் இரவு வரை நடந்த இந்த விவாதத்தை நீயா நானாவில் ஒளிபரப்ப  அந்தோணி அவர்களிடம்  பேச முடிவு செய்துள்ளேன்.

இந்த மொக்கை பதிவின் எதிரொலிகளை அவர்களுக்கே டெடிகேட் செய்கிறேன் ..ஏன்னா இத இன்னிக்கு எழுதியே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.

பிளேடு பீடியா கார்த்திக்கு மேற்சொன்ன முட்டை நண்பர்களில் ஒருவரை தெரியும் (கார்த்தி என்ன கலெக்டரா?னு கேக்க கூடாது)

இந்த ஆராய்ச்சி மற்றும் விவாதங்கள் அனைத்தும் ஆசிரியருக்கே சொந்தம்
மத்தவங்களுக்கு வாடகைக்கு..

அவதானிப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கருத்து பெட்டியில் அரசனை போல இடலாம்.

பதிவை விட குறிப்புகள் நீளமாக இருக்க கூடாது என்பது பிளாக்கர் நண்பனின் அறிவுரை.எனவே டாட்.
                                                                     .சுபம்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆயுத பூஜை - ஏன் இந்த ஓர வஞ்சனை?

ஆயுத பூஜை....பஞ்ச பாண்டவர்கள் வெட்டியா சீட்டாடி தோற்ற பிறகு யாருக்கும் தெரியாம கொஞ்ச நாள் பூவுலகுக்கு டேக்கா கொடுத்துட்டு காட்டுக்கேள்ளே போய் குந்திகிட்டாங்களாம்.அந்த நாட்களில் அவங்க தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் (வன்னி என்றால் மரமும் வருகிறது ...ராமதாஸ் சரித்திரப் புகழ் போல) மறைத்து வைத்து இருந்தார்களாம்.
அப்பால திருப்பி பூவுலகிற்கு வந்தப்ப அந்த ஆயுதங்களை எடுத்து பூஜை பண்ணின்னாங்களாம்.அதான் ஆயுத பூஜையாம்.இப்படித்தான் ஆயுத பூஜைனு பேர் வந்ததாம் .

இன்னைக்கு பைக்,சைக்கிள் னு எல்லாமே ஆயுதம் ஆகி விட்டது.சும்மா வளைச்சி வளைச்சி பூஜைதான்.கொஞ்ச நேரம் நாம அசையாம இருந்தா நம்மளையும் பூஜை பண்ணி பொலி கொடுத்துருவாங்க போல..பயபுள்ளைங்க எலிய கூட விடலை பட்டயடிச்சு பாலாபிசேகம்தான்.

சட்டம் போட்டு சட்டம் காக்கிற (?) காவல் துறை துருப்பிடிச்ச ரத்தம் நனைந்த  மொத்த துப்பாக்கியையும் எடுத்து பூஜை பண்ணுறாங்க.(பாவம் தொலைக்கவா?)அரசு அலுவலகத்தில் இவையெல்லாம் தடையாம்..சொன்னா கேட்டால்தானே?

பக்தி பக்தி பக்தி எவ்வளவு கண்ணை மறைச்சாலும் சில இடங்களில் சில பொருட்களில் மட்டும் கரெக்ட்டா கண்ண தெறந்துகுது.....அட ஆமாங்க ,இவ்வளவு தீவிரம் காட்டுற  பூஜையிலே பாரபட்சம் பார்த்தா எப்படிங்க நியாயம்?

நமக்கு என்னானா எதை எல்லாமோ பூஜை பண்ணுறாங்க நம்மள சுத்தமா வைச்சிருக்கிற இந்த செருப்பு,துடைப்பம்,இதுக்கும் பூஜை பண்ணினா என்ன தப்பு? சுத்தம் வேணும் ஆனா சூத்திரன் கொண்ட ஆயுதம் வேண்டாமோ?


இதெல்லாம் நீங்க வேணும்னு ஒதுக்கலைனு எனக்கு தெரியுது சார் ...அதனால் என்ன   இன்னைக்கு முதல்  இவைகளுக்கும் இடப்பங்கீடு தரலாமே...என்னது அசுத்தமா இருக்குமா?உங்க வண்டி மட்டும் எத்தனை இடத்துல ஏறி இறங்குது? அட வண்டிய விடுங்க நம்மளையே எடுத்துப்போம் ....அவ்வளவு சுத்தமா நாம?

 ஜனவரில போகி பண்டிகைன்னு சொல்லி இவைகளை கொளுத்துவதைதானே இத்தனை நாளாய் செய்துள்ளோம் நண்பர்களே?

ஏன் இந்த ஓரவஞ்சனை?

உங்களிடம் நேர்மையான பதில் இருந்தால் பின்னூட்டத்தில் தரவும்.இல்லைனா ஓட்டுப் போடவும்.

இந்த படத்தை முகநூலில் தந்து  பதிவை தூண்டிய தியோடர் E.ஜான் அவர்களுக்கு நன்றி.









செவ்வாய், 16 அக்டோபர், 2012

"பாவநாசம்... கதவத் திற " -டெடிகேட்டட் டூ "குடிமகன்கள்"

சங்க காலம் தொட்டு மது அருந்தும் மங்களகரமான பழக்கத்தை தமிழன் கடைப்பிடித்திருந்தான் என்றாலும் அதன் பின் விளைவுகளை எங்கேயும் பதிவு செய்தார்களா என்றால் தெரியவில்லை.(நேர்மையா சொன்னா எனக்கு தெரியாது) அப்படி ஒரு மங்களகரமான குடி ஒன்று  குடியை கெடுத்த உண்மை கதைதான் இது.

தமிழன் டா...
மணியாச்சி பக்கம் அக்கநாயக்கன்பட்டினு ஒரு ஊரு...நம்ம ஹீரோ  பேரு நியாபகம் தெரியலைங்க ..அவர் மனைவி பேரு பாவநாசம்...(புருசன் பேரு தெரியலை பொண்டாட்டி பேரு தெரியுது பாருப்பா  ) ஊருக்கு நடுவுல பொதுக் கிணறு பக்கமா வீடு...நம்ம ஹீரோ  வேலையில எவ்வளவு சின்சியரோ அவ்வளவு சின்சியரா சாயங்காலமானா  சாராயக்கடைல துண்டை போட்டார்னா கடைய அடைக்கிற வரை குடிதான்...

தெனமும் ராவானா பதினோரு மணிவாக்குல கடைசி பஸ்ல வீட்டுக்கு வந்து கதவ தட்டுவாரு.."பாவநாசம்...கதவைத் திற..."    

"ஏய் பாவநாசம் கதவத் திற..."அது ஒரு சுகமான ராகம் போல... அந்த பிள்ளையும் அதுக்காகவே கதவை மூடி வைத்திருக்கும்.


ஒரு நா ஓவர் குடி....பய புள்ளைக்கு ஒன்னும் புரியல..தட்டு தடுமாறி வீட்டு பக்கமா வந்தவன்...வீடுன்னு நினைச்சு கிணத்து  முன்னாடி நின்னுட்டு "பாவநாசம் கதவத் திற....ஏய் பாவநாசம் கதவத் திற" ன்னு சவுண்டை போட..பதில் வராத காரணத்தினால் கை வைத்து காற்றில் தட்ட... கதவு இருந்தாதானே ?

அப்புறம்தான் கூத்து...கிணத்துமேட்டுல கதவு கிடைக்காத ஹீரோ ... "ஓ கதவ திறந்தேதான் வைச்சிருக்கியா"னு கேட்டுகிட்டே வீட்டுக்குள்ள போறேன்னு அடியெடுத்து  கிணத்துக்குள் விழ....அப்புறம் என்ன ?பாவநாசம் மட்டும் இல்லாம மொத்த ஊரும் வந்தும் அவரை காப்பாத்த முடியல....உள்ள தண்ணி போதாதுன்னு கிணத்து தண்ணியையும் குடிச்சி உயிர் போனதுதான்  மிச்சம்.

"பாவநாசம் ....கதவத் திற "நியாபகம் இருக்கட்டும்.
"மச்சான் ஓபன் தி பாட்டில் " மறந்து போகட்டுமே....

நீதி: குடி குடியை கெடுக்கும்....

நீங்க குடியை வெறுப்பவர் என்றால் ஒரு ஓட்டு போடுங்க.....ஆதரிப்பவர் என்றால் கருத்துப் போடுங்க .....

இல்லை இல்லை கிணத்துக்கு கதவு வைக்காதாதுதான் தப்புன்னு யாராவாது பின்னூட்டம் போட்டுடாதிங்க மக்களே.......


திங்கள், 15 அக்டோபர், 2012

சன் மியூசிக் சங்கடங்களும் இசையருவி இம்சைகளும்...

அத்திப்பட்டியோ,அரக்கோணமோ,அபுதாபியோ,அமெரிக்காவோ எங்கே இருந்தாலும்  எத்தனை மொழில எத்தனை பாட்டுகள் கேட்டாலும் பூவுலகம் போற்றும் சொக்க வைக்கும் தமிழ் பாட்டை கேட்டு கொண்டே பணி செய்வது தனி சுகம்.

பல காம்பிரியர்களின் மொக்கைகளை மீறி விளம்பரங்களை மீறி தமிழ்  சேனல்களில்  பாட்டு கேட்கும் போராட்டத்தில் இருந்து மண்ணின் மைந்தர்கள்  பல லோக்கல் சேனல்களை திருகியும் எப் ம் வைத்தும் தப்பித்து விடுகின்றனர்..

ஆனா இந்த வயித்துப்பாட்டுக்கு தமிழ்நாட்டை விட்டு வெளில வந்தவங்க சன் மியுசிக் ,இசையருவி ரெண்டையும் கட்டிக்கிட்டு படுற பாடு.....காலைல பாட்டு கேட்டுகிட்டே வேலைக்கு கிளம்பலாம்னா பக்தி பாட்டுன்னு பட்டய போட்டுட்டு சாமி பாட்டா போட்டு படுத்துறாங்க.....மஞ்சதுண்டு போட்ட கருணாநிதி பஜனை பாடாத குறைதான் காலைல ஆறிலிருந்து ஏழு வரை.

அப்பால எட்டு மணிக்கு தாண்டி  விளம்பரங்களுக்கும் ரெண்டு ரெண்டு காம்பிரியருங்க  சேர்ந்து போடுற மொக்கைக்கும் நடுவிலே வர்ற பாட்டுக்கள் பார்ப்பது  பவர் ஸ்டாரின் "ஆனந்த தொல்லை". நல்ல வேலையா ஆட்சி மாறுச்சு..இல்லைனா இந்த அழகிரியும்,மாறனும்,ஸ்டாலினும் தெனமும் ஒரு படத்தை எடுத்துட்டு போடுற விளம்பர கொலைகள் உச்ச பட்ச உயிர் வதை கொடுமையாகும்.

பொது அறிவ வளக்குறேன்னு ஹிந்தி இந்தியாவின் தேசிய  மொழின்னு  பிரபலமான ஒரு காம்பிரியர் வதக்கி எடுத்தார்.இந்த அறிவாளி பிள்ளைங்க அடக்கமா புது வருஷம் கொண்டாடுறத பாக்குற  அளவுக்கு நம்மள முட்டாளாக்கியதிலும் அவர்களை நட்சத்திரங்களாகவும் மாற்றிய பெருமை விகடன்,குமுதம் ,குங்குமங்களை சேரும்.உங்களுக்குள்ள என்னாப்பா கொலாபரேசன்?

பொது அறிவுப் புலி இவருதாங்கோ.
பாட்டு போடுற புண்ணியவானுக்கு ஒன்னு வீட்ல பிரச்சனை இல்லைனா   டாஸ்மாக் சோனை.அட ஆமாங்க  உச்சி வெயிலில் மதியம் ஒரு மணிக்கு நிலா காயுது பாட்டெல்லாம் போட்டான்னா என்னத்த  சொல்ல?வேகாத வெக்கையில வீட்ல இருக்கிற பொம்பிளைங்க தலையணைய பிய்க்கவா?

எலுமிச்சை,நெல்லிக்காய் ,பால்,தயிர்,வெண்ணை  இப்படி நாலு ஐட்டம் பேரை தெரியுமா உங்களுக்கு?நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி மேடம்.....அந்த நாளுல ரெண்ட சேர்த்து மூஞ்சில அப்ளை பண்ணுங்க மூஞ்சு பொலிவா இருக்கும்னு பொலி போடுறதுதான் லேடீஸ் சாய்ஸ்.இதுல எட்டாங்கிளாஸ் படிக்கிற பிள்ளைக்கும் அவங்க குடும்பத்துக்கும் டெடிகேட் பண்ற பாட்டு"உருகுதே...... மருகுதே...".

இதெல்லாம் விட பெரிய ரோதனை குட்டீஸ் நேரம் குரங்குகள் நேரம்னு போடுற பாட்டு இருக்கே....டாடி மம்மி வீட்ல இல்லை,யம்மாடி யாத்தாடின்னு குத்துற குத்து இருக்கே அது உலக மகா குத்துடா சாமி..பிள்ளைங்க எல்லாம் நல்லா வருவாய்ங்க....ஏன் சாமி, காலைல கடவுளுக்கு ஒரு மணி நேரம் குடுத்த மாதிரி சாயங்காலம் சின்ன பிள்ளைகளுக்கு நீதி கதை பாட்டு,சின்ன சின்ன நீதிக் கதைகள் காட்டலாம்ல?உங்க வருமானத்துக்கு எங்க பிள்ளைங்க ஊறுகாய்?அப்படித்தானே?சிறுவர்கள் அப்படியே அதை இமிடேட் செய்வதை பார்க்கும் போது வேறு வழியில்லாமல் சேனல மாத்திதான் ஆகணும்.


இப்ப புதுசா ஒரு பொண்ணு இசையருவில நைட்டு பத்து மணிக்கு வர்றாங்க ...சும்மா சினிமா படத்துல சில நாயகி கேரக்டர் இருக்குமே கெக்கிலி பிக்கிளின்னு ....அதே மாதிரி சிரிச்சிக்கிட்டே இருக்குதுங்க இம்சை அரசி .ஏன்னு கேளுங்க ..அட ,அதுக்கும் சிரிக்கத்தான் செய்யுது.நாட்டாமையப போல ஒரு ஜோடி தெனமும் நைட்டானா தொலிய உரிக்கிறாங்க...அதுலேயும் அந்த சடையப்ப நாட்டாமை ஆண்தானா? இல்லை பொண்ணா?துணிய மாத்துறாங்களா இல்லியாப்பா?எத்தனை கேள்விகள்???

ஒரே ஆறுதல், நைட்டு தூங்கும்போது பாட்டு கேட்டுகிட்டே தூங்கலாம்னா இடைல கொஞ்ச நாளா பதினோரு மணி வரை  காமெடியை போட்டு உசுர வாங்குனாங்க...இப்ப அப்படி இல்லாம இளையராஜா பாட்ட போட்டு தூங்க வைச்சுடுறாங்க...அதுவரைக்கும் சந்தோசம்.

 என்னது கரண்ட் இல்லியா? கடுப்பை கிளப்புறேனா?....சமயம் தெரியாமா சடங்கு வைச்சுட்டேன் போல ..மன்னியுங்கள் தெய்வங்களே....உங்க கோவத்தை ஓட்டு பட்டைல காட்டுங்க....

வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஹாரியின் கேளுங்க தளமும்,நாலு ஸ்பூன் கெட்ட வார்த்தையும் ...

நண்பன் ஹாரி  கேளுங்க  அப்படின்னு கேள்வி பதில் தளம் ஒன்றை புதுசா அறிமுகம் செய்ய ...ஒரு ஆர்வகோளாரில் நான் அஸ்ஸாம்,காஷ்மீர் பற்றிய கேள்விகளுக்கு இங்கு பயிற்சி பெறும் அந்த மாநிலத்து பசங்ககிட்ட பதில் வாங்கி தருகிறேன் ..பதிவர்கள் கேள்விகளை வரவேற்கிறேன்ன்னு ஹாரிட்ட சொல்லி  வைச்சேன்.

அவரும் உங்கள் கேள்விகளுக்கு  "ஹாய் சதீஷ்" (!!??)பதில் தருகிறார்னு போர்டு போட....அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு அவரே சொல்லுகிறார்  கேளுங்க ....

###மோசமான தகவல் என்ன என்றால் இது குறித்து எனக்கு கிட்டத்தட்ட கருத்துரையில் வெளியிட முடியாத ஆபாச வார்த்தைகளே வந்து குவிந்து கொண்டு இருக்கின்றன.. சி.பி க்கு மூன்று பதிவுகள் தேத்தும் வண்ணம் கேள்வி வந்து விட்டது.. ஆனால் இந்த பகுதிக்கு மிக அபத்தம் நிறைந்த கேள்விகள் தான் வருகின்றன.. தம்பி அண்ணா (தம்பியா அண்ணாவா.. ஹி ஹி) உங்களுக்கு வந்த கருத்துரைகள் தான்.. என்ன கொஞ்சம் நாலு ஸ்பூன் கெட்ட வார்த்தை அரை டி காசன் ரொம்ப ஆபாச வார்த்தை அதிகம் .. அப்படி தான் வருகிறது.. இப்போது வரை.. நான் நாலு பதிவு எழுதி விடுவேன் அவ்வளவு பந்தி அமைப்பில் கருத்து வருகிறது.. சோ சேட்.####.

இதுக்கு பேர்தான் "கேட்டு வாங்குறதுனு" சொல்வாங்களோ?

முந்தய பதிவுகளின் விளைவுகளே இந்த அர்ச்சனைகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்.ஆனாலும் இந்த கைப்பிள்ளை களம் இறங்கிட்டா ரத்தம் பார்க்காம வர மாட்டான் (யாரோட ரத்தம்?).எனவே பதிவுலக கண்மணிகளே தங்களின் மேலான கேள்விகளை ஆபாச டீ ஆத்தாமல் கேளுங்க தளத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொள்(ல்)கிறேன்.

இது ஒரு புரிதலையும்,ஊடகப் பார்வைகளை ஆராயவும் சற்று வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.

ஆபாச டீ ஆத்தும் நண்பர்களுக்கு சொல்லி கொள்வது என்னவென்றால் ...உங்களுக்காகத்தானே கடை போட்டு உட்காந்துள்ளேன்.இங்க வந்து ஆத்துறது?அப்படி சுத்தி வளைச்சு ஆத்துரதுல என்னப்பா ஆனந்தம்?

வெகு எதேச்சையாக இன்று முக நூலில் ஒரு கவிதை...இந்த பதிவுக்கு பொருத்தமா இருக்கும்னு நம்புறேன்.....

சொற்குற்றம்- சுகுமாரன்

யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது


சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்

நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்

ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?


ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?

சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல. 



எப்படியோ இன்னைக்கு ஒரு பதிவை தேத்தியாச்சு ........:):)

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

எரிச்சலூட்டும் சில பிரபல பதிவர்கள்

சில பிரபல பதிவர்களின் பதிவுகள் நல்லா இருக்குதோ இல்லையோ  அவர்களின் தளம் எரிச்சலை தருகிறது.
                    என்ன பிரச்சனைனா இவங்க எழுத்து நல்லா இருக்குது என்பதாலும்,எப்பவுமே முகப்பு பகுதியில் இருப்பதாலும்,சுண்டி இழுக்குற மாதிரி தலைப்பு வைப்பதாலும்,நாம முதலில் இவங்க பதிவை படிக்க போனா IPL கணக்கா ஒரே விளம்பரம்...
                   விளம்பரத்துக்கு பின்னாடி இவங்க பதிவு..அந்த விளம்பரத்தை மூடிட்டு படிக்கலாம்னு  X க்ளிக் பண்ணுனா புது TAP திறக்குது.இவ்வளவு சோதனையும் கடந்து பதிவை படிச்சா அது விகடனில் வந்ததும்,ட்விட்டரில் ட் விட்டியதும்,ஒண்ணுமே கிடைக்கலைனா மொக்கை படமா பார்த்து விமர்சனம்னு விரட்டி விரட்டி அடிக்கிறதும்....  முடியலைடா சாமி.

                      ஒண்ணுமே அறியாத எனக்கு நிறைய கற்று கொடுத்த தொழில் நுட்ப பதிவு எழுதும் வாத்தியாருங்க சேட்டை இன்னும் அதிகம்.திரையின் நடுவில் என்னோடு முகநூலில் இணையுங்கனு 15 நொடிகள் அதிகாரம் பண்றாங்க.மனுஷனுக்கு படிக்கிற ஆசையே இல்லாம போயிடுது.
                        நல்ல படம் ஒன்றை விஜய் டிவியில் விளம்பரங்களுக்கு நடுவே பார்ப்பது போலத்தான் சில பதிவுகளும்.இன்னும் போக போக விளம்பரத்தின் மேல் க்ளிக் செய்தால்தான் பதிவை படிக்க முடியும் என்று தோன்றுகிறது.
                   சம்பந்தப்பட்ட பதிவர்கள் அளவான விளம்பரத்தோடு பதிவிட்டால் 
  நன்றாக இருக்கும்.பல்சுவை புத்தகம் போல நான் நினைக்கும் வலைப்பூக்கள் வியாபார பூக்களாக மாறிவிடுமோ என்று பயம் தோன்றுகிறது.
            யாரெல்லாம் இப்படி பதிவிடுகிறார்கள் என்று சொன்னால் தனி மனித தாக்குதல் என்று மனித உரிமை ஆர்வலர்கள் உறுமுவார்கள்.எனவே வேண்டாம்.

டிஸ்கி: .இந்த பதிவு முழுக்க முழுக்க என்  தளத்துக்கு ஒரு அறிமுகம் வேணும்கிற சுயநலத்தோடு கூடிய பொது நலத்தோடு எழுதியதே.நமக்குதான் யாரையாவது மெல்லாம தூக்கம் வராதே.(டிஸ்கினா என்னனு எனக்கு தெரியாதுங்க.நிறைய பேரு எழுதுறாங்கனு நானும் எழுதுறேன்.அதுக்கு தமிழில் என்னனு யாராவது சொன்னா நல்லது)