Translate

டாஸ்மாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாஸ்மாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 அக்டோபர், 2012

விழுந்து கிடக்கும் "குடிமகன்கள்"-கைவிடப்பட்ட குடிமகன்கள்

சாலையோரம் விழுந்து கிடக்கும் மனிதர்களை வெகு சுலபமாக குடிகாரனாக்கி விடுவதில் நமக்கு அப்படி ஒரு சுகம்.அது ஒரு மறைமுகமான எஸ்கேப்பிசம் என்று மனசுக்குள் தோன்றினாலும் அதைத்தான் தொன்று தொட்டு செய்து வருகிறோம்.

எனது பக்கத்து வீட்டில் உள்ளவர் வயது 60 இருக்கும்...தபால் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர் .அந்த வயதிலும் மனைவியோடு மிக காதலாக வாழ்ந்து வந்தவர்.படிக்கட்டில் அமர்ந்து தன் மனைவிக்கு பேன் எடுத்து கொண்டே பேசி கொண்டிருப்பார்.

காலையில் தாமிரபரணிக்கு சென்று குளித்து விட்டு துணிகளை துவைத்து பொறுப்பாக வரக்கூடியவர் நேரம் கடந்தும் வரவில்லை. தேடி சென்ற போது அவர் சாலையோரம் விழுந்து கிடந்திருந்தார்.பசியினாலும்,LOW BPயினாலும் சாலையோரம் மயங்கி விழுந்தவரை யாரும் கவனிக்கவில்லை.கவனித்திருந்தாலும் காலையிலேயே குடிச்சிட்டு கிடக்குறத பாருன்னு சொல்லி கடந்து செல்வோமே தவிர உண்மை நிலையை அறிய கூட முயலப்போவதில்லை.அப்படியாக கைவிடப்பட்ட அவர் அதே இடத்தில் இறந்தும் போனார்.

சில வருடம் முன்பு எனது தந்தை தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இதே LOW BP காரணத்தால் மயங்கி விழுந்தார்.மதியம் விழுந்த அவரை அவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தில் யாரும் சீண்ட வில்லை.அனைவருக்கும் அவர் ஒரு குடிகாரன் குடிச்சிட்டு கிடக்குறான்.அவ்வளவுதான்.மாலை தானாக எழுந்து தன்னைத்தானே சுதாரித்து வீடு வந்து சேர்ந்தார்.

மேற்கண்ட இருவரும் தங்கள் வாழ்க்கையில் மதுவினை தொடாதவர்கள். ஒருநாளும் குடித்ததில்லை...ஆனால் அவர்கள் கைவிடப்பட்டனர்.ஒருவர் இறந்தும் போனார்.யார் காரணம்?குடிமகன்களா? குடிமக்களா?

மூதாட்டி ஒருவர் வெயிலில் மயங்கி விழ 108 ஊழியர்கள் அவருடன் யாரும் மருத்துவமனை வர தயாரில்லாத காரணத்தினால் அங்கேயே விட்டு சென்றனராக இணையத்தில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

எனவே நண்பர்களே,சாலையோரம் விழுந்து கிடக்கும் அனைவரும் குடித்து விட்டு விழ வேண்டுமென்று அவசியம் இல்லை.சற்று கூர்ந்து நோக்குங்கள் அவர் உங்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியராக கூட இருக்கலாம்...தெரிந்தவராக இல்லை என்றாலும் மனிதனாகதான் இருப்பார்.

குடித்துவிட்டு விழுந்தாலும் காப்பாற்ற கூடாது என்று இல்லை.மனித உயிர் அவரை பொருத்தவரை ஒன்றுமில்லாமல் போனாலும் அவர் பின் இருக்கும் குடும்பம் கருதியாவது உதவித்தான் ஆக வேண்டும்.குறைந்த பட்ச உதவியாக நீர் கொடுத்தோ அருகில் உள்ள காவல்துறையினர் கவனத்திற்கோ கொண்டு செல்லலாமே....ஆம்புலன்ஸ்க்கு தகவல் தரலாமே.

குடிப்பவர்கள் தங்கள் நிலை புரியாமல் விழுந்து கிடக்கும் அவலத்தால் சில அப்பாவிகளும் கைவிடப்படுகின்றனர்.இது போக சாலை விபத்துகளும் குடியினால் வெகுவாக நிகழ்கின்றன.தான் விழுவது இல்லாமால் எதிரே வருபவரையும் விழ வைப்பதில் குடியும் ஒரு காரணம்தானே.

குடிப்பவர்கள்,குடிக்காதவர்கள்.....மனிதனாக பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது.விசயமிது.

இதை பற்றிய தங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.....

செவ்வாய், 16 அக்டோபர், 2012

"பாவநாசம்... கதவத் திற " -டெடிகேட்டட் டூ "குடிமகன்கள்"

சங்க காலம் தொட்டு மது அருந்தும் மங்களகரமான பழக்கத்தை தமிழன் கடைப்பிடித்திருந்தான் என்றாலும் அதன் பின் விளைவுகளை எங்கேயும் பதிவு செய்தார்களா என்றால் தெரியவில்லை.(நேர்மையா சொன்னா எனக்கு தெரியாது) அப்படி ஒரு மங்களகரமான குடி ஒன்று  குடியை கெடுத்த உண்மை கதைதான் இது.

தமிழன் டா...
மணியாச்சி பக்கம் அக்கநாயக்கன்பட்டினு ஒரு ஊரு...நம்ம ஹீரோ  பேரு நியாபகம் தெரியலைங்க ..அவர் மனைவி பேரு பாவநாசம்...(புருசன் பேரு தெரியலை பொண்டாட்டி பேரு தெரியுது பாருப்பா  ) ஊருக்கு நடுவுல பொதுக் கிணறு பக்கமா வீடு...நம்ம ஹீரோ  வேலையில எவ்வளவு சின்சியரோ அவ்வளவு சின்சியரா சாயங்காலமானா  சாராயக்கடைல துண்டை போட்டார்னா கடைய அடைக்கிற வரை குடிதான்...

தெனமும் ராவானா பதினோரு மணிவாக்குல கடைசி பஸ்ல வீட்டுக்கு வந்து கதவ தட்டுவாரு.."பாவநாசம்...கதவைத் திற..."    

"ஏய் பாவநாசம் கதவத் திற..."அது ஒரு சுகமான ராகம் போல... அந்த பிள்ளையும் அதுக்காகவே கதவை மூடி வைத்திருக்கும்.


ஒரு நா ஓவர் குடி....பய புள்ளைக்கு ஒன்னும் புரியல..தட்டு தடுமாறி வீட்டு பக்கமா வந்தவன்...வீடுன்னு நினைச்சு கிணத்து  முன்னாடி நின்னுட்டு "பாவநாசம் கதவத் திற....ஏய் பாவநாசம் கதவத் திற" ன்னு சவுண்டை போட..பதில் வராத காரணத்தினால் கை வைத்து காற்றில் தட்ட... கதவு இருந்தாதானே ?

அப்புறம்தான் கூத்து...கிணத்துமேட்டுல கதவு கிடைக்காத ஹீரோ ... "ஓ கதவ திறந்தேதான் வைச்சிருக்கியா"னு கேட்டுகிட்டே வீட்டுக்குள்ள போறேன்னு அடியெடுத்து  கிணத்துக்குள் விழ....அப்புறம் என்ன ?பாவநாசம் மட்டும் இல்லாம மொத்த ஊரும் வந்தும் அவரை காப்பாத்த முடியல....உள்ள தண்ணி போதாதுன்னு கிணத்து தண்ணியையும் குடிச்சி உயிர் போனதுதான்  மிச்சம்.

"பாவநாசம் ....கதவத் திற "நியாபகம் இருக்கட்டும்.
"மச்சான் ஓபன் தி பாட்டில் " மறந்து போகட்டுமே....

நீதி: குடி குடியை கெடுக்கும்....

நீங்க குடியை வெறுப்பவர் என்றால் ஒரு ஓட்டு போடுங்க.....ஆதரிப்பவர் என்றால் கருத்துப் போடுங்க .....

இல்லை இல்லை கிணத்துக்கு கதவு வைக்காதாதுதான் தப்புன்னு யாராவாது பின்னூட்டம் போட்டுடாதிங்க மக்களே.......