Translate

சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 அக்டோபர், 2013

விளக்கமாக விளக்கப்படுகிறது ....

இருட்டில் புணரும் சாதி நாய்க்கு 
நாய் மட்டுமே அவசியப்பட்டது 
சாதி நாய் அல்ல ....

ஆண்டவர்களின் செங்கோல்கள் 
இருட்டான குழிகளில் மட்டும்
சாதி நிறம் கேட்பதில்லை ..

மாட்டுக்கறியின் வீச்சம்
மல்லிகைப்பூவாய் சாத்தியமாவது
இருட்டான முகர்தலில் மட்டுமே....

விடியல் பதிப்பில் மட்டும்
விளக்கமாக விளக்கப்படுகிறது
இன்ன ஜாதி இன்ன ரகத்தில்
பெண்ணொன்று வேண்டுமென்று....

விளக்கமாக விளக்கபடுகிறது
விலக்கப்பட்ட சாதிகள்
உள்ளதென்று .......



இது கண்டிப்பாக சாதிப் பிரியர்களுக்கு ......சாதி அடிப்படையில் கலப்பு திருமணத்தை எதிர்ப்பவர்களுக்கு ....




வெள்ளி, 11 அக்டோபர், 2013

சாதி தாஸ்க்கும் வெட்டியான அல்லக்கைகளுக்கும்*......

தருமபுரி மரக்காணம் என கலவர தீ யை கொளுத்தி விட்டு வேடிக்கை  பார்த்து இன்று ஜாதி சங்கங்களுடன் என்று சொல்ல தைரியமற்று சமுதாய இயக்கங்களுடன் போட்டி  என ஓட்டு பொறுக்கும் தலைவர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கும் இந்த உரைநடை கவிதையின் கடைசி கேள்வி அர்ப்பணம்...

மாட்டுக்கறிதான்
பிரச்சனையென்றால் மனிதக்கறி விழுங்கும் உன் தலைவனை கேள் முதலில் நீ எந்த சாதி மிருகமென்று? சாதிதான் பிரச்சனையென்றால் ரத்தம் வேண்டிய அவசர இரவில் தைரியமாகக் கேள் ரத்த வங்கியில் இது வன்னியன் ரத்தமா? பறையன் ரத்தமா? ஆண்டதும் பேண்டதும் வீரமென்றால் உயிர் கொன்றதும் தின்றதும் தீரமென்றால் பயிர் களஞ்சியம் கொண்ட சாதியென்றால் உயிர் வாழ உன் சாதி தகப்பெனவனும் பிச்சையெடுத்து உண்பதில்லை என உறுதியாக சொல்வாயா? அது இது என ஆயிரம் காரணிகள் இருக்கிறது நீ உயிர் வாழ...... உண்டு கழிக்க ...... அதிலொரு காரணி நானாயிருந்தால் செத்து விடுவாயா என்ன?


*இந்தப் பதிவு மருத்துவர் அய்யா,தமிழ் குடி தாங்கி திரு.ராமதாஸ் அவர்களையோ பாமக கட்சியினையோ குறிக்காது.....சாதி வெறி பிடித்த தலைவர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்

உங்கள் ஆதரவை எதிர்ப்பை பின்னூட்டத்தில் ,ஓட்டுப்பெட்டியில், பகிர்தலில் என பல விதங்களில் வெளிப்படுத்தலாம் .......

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆயுத பூஜை - ஏன் இந்த ஓர வஞ்சனை?

ஆயுத பூஜை....பஞ்ச பாண்டவர்கள் வெட்டியா சீட்டாடி தோற்ற பிறகு யாருக்கும் தெரியாம கொஞ்ச நாள் பூவுலகுக்கு டேக்கா கொடுத்துட்டு காட்டுக்கேள்ளே போய் குந்திகிட்டாங்களாம்.அந்த நாட்களில் அவங்க தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் (வன்னி என்றால் மரமும் வருகிறது ...ராமதாஸ் சரித்திரப் புகழ் போல) மறைத்து வைத்து இருந்தார்களாம்.
அப்பால திருப்பி பூவுலகிற்கு வந்தப்ப அந்த ஆயுதங்களை எடுத்து பூஜை பண்ணின்னாங்களாம்.அதான் ஆயுத பூஜையாம்.இப்படித்தான் ஆயுத பூஜைனு பேர் வந்ததாம் .

இன்னைக்கு பைக்,சைக்கிள் னு எல்லாமே ஆயுதம் ஆகி விட்டது.சும்மா வளைச்சி வளைச்சி பூஜைதான்.கொஞ்ச நேரம் நாம அசையாம இருந்தா நம்மளையும் பூஜை பண்ணி பொலி கொடுத்துருவாங்க போல..பயபுள்ளைங்க எலிய கூட விடலை பட்டயடிச்சு பாலாபிசேகம்தான்.

சட்டம் போட்டு சட்டம் காக்கிற (?) காவல் துறை துருப்பிடிச்ச ரத்தம் நனைந்த  மொத்த துப்பாக்கியையும் எடுத்து பூஜை பண்ணுறாங்க.(பாவம் தொலைக்கவா?)அரசு அலுவலகத்தில் இவையெல்லாம் தடையாம்..சொன்னா கேட்டால்தானே?

பக்தி பக்தி பக்தி எவ்வளவு கண்ணை மறைச்சாலும் சில இடங்களில் சில பொருட்களில் மட்டும் கரெக்ட்டா கண்ண தெறந்துகுது.....அட ஆமாங்க ,இவ்வளவு தீவிரம் காட்டுற  பூஜையிலே பாரபட்சம் பார்த்தா எப்படிங்க நியாயம்?

நமக்கு என்னானா எதை எல்லாமோ பூஜை பண்ணுறாங்க நம்மள சுத்தமா வைச்சிருக்கிற இந்த செருப்பு,துடைப்பம்,இதுக்கும் பூஜை பண்ணினா என்ன தப்பு? சுத்தம் வேணும் ஆனா சூத்திரன் கொண்ட ஆயுதம் வேண்டாமோ?


இதெல்லாம் நீங்க வேணும்னு ஒதுக்கலைனு எனக்கு தெரியுது சார் ...அதனால் என்ன   இன்னைக்கு முதல்  இவைகளுக்கும் இடப்பங்கீடு தரலாமே...என்னது அசுத்தமா இருக்குமா?உங்க வண்டி மட்டும் எத்தனை இடத்துல ஏறி இறங்குது? அட வண்டிய விடுங்க நம்மளையே எடுத்துப்போம் ....அவ்வளவு சுத்தமா நாம?

 ஜனவரில போகி பண்டிகைன்னு சொல்லி இவைகளை கொளுத்துவதைதானே இத்தனை நாளாய் செய்துள்ளோம் நண்பர்களே?

ஏன் இந்த ஓரவஞ்சனை?

உங்களிடம் நேர்மையான பதில் இருந்தால் பின்னூட்டத்தில் தரவும்.இல்லைனா ஓட்டுப் போடவும்.

இந்த படத்தை முகநூலில் தந்து  பதிவை தூண்டிய தியோடர் E.ஜான் அவர்களுக்கு நன்றி.









வியாழன், 13 செப்டம்பர், 2012

இந்து மதத்தின் கோர முகம்(தைரியமாக வரலாம்)

எப்படி உருவானது என்று வரலாறு தெரியாத  இந்து மதத்தின் பெயரால், இந்து மதத்தால் நமக்குள்ளே ஒரு  கோரமான முகம்  ஒன்று உருவானது மோசமான வரலாறாகும்.சாதி என்னும் அமைப்புக்குள் நாம் தினம் தினம் எங்கோ ஒரு மனிதனை அசிங்கபடுத்துகிறோம்.

இந்து மதத்தால்  இல்லை என்று மறுப்பிர்கள் என்றால் அதை வழிநடத்தி பரப்பி தந்தவர்களின் கொடைதான் இந்த சாதி அமைப்புகள்.இதன் கோரமான முகம் பல உயிர்களையும்,பலரின் சுயமரியாதையையும் குழி தோண்டி புதைத்துள்ளது அவற்றின் சிலவற்றை தோண்டி எடுத்து உங்கள் முன்னே போட்டுள்ளேன்.நாற்றத்திற்கு மூக்கை பிடிக்கும் முன் உங்கள் மனதை பிடித்து கேட்டு கொள்ளுங்கள் நான் சாதி வெறி பார்ககிறேனா?

தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகள்,தீண்டாமைகள் தொடரத்தான் செய்கிறது.மரணங்களுக்கு சற்றும் சளைக்காதது மரியாதை குறைவும்,அவமானங்களும்,இழிநிலை வாழ்வும்......


கீழ வெண்மணி படுகொலை 



பரமக்குடி படுகொலை 

கயர்காஞ்ச் வன்புணர்ச்சி படுகொலை 


பரமக்குடி படுகொலைகள் 
ஈனப் பயலான உனக்கு தலைவர் பதவி எதற்கு? தலை துண்டிக்கப்பட்ட  முருகேசன்.

ஆந்திராவில் கொல்லப்பட்ட சேரிவாழ் மக்கள் 

தேசிய கொடியை ஏற்ற மறுக்கப்பட்ட,அவர்களின் இருக்கையில் அமர மறுக்கப்பட்ட  தாழ்த்தப்பட்ட  இன ஊராட்சிமன்ற  தலைவிகள் 

ஆதிக்க சாதி பெண்களை திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டவர்கள்,மற்றும் தாழ்த்தப்பட்டவனை திருமணம் செய்ததால் தன் தந்தையால் கொல்லப்பட்ட ஸ்ரீபிரியா 
செருப்பணிய தடை 

வண்டியில் ஏறி செல்ல தடை (விருதுநகர்)

இங்கே மட்டும் 100% இட ஒதுக்கீடு அவாளுக்கு மட்டும்.

உள்ளே உயர் சாதி 

வெளியே கீழ் சாதி 

செருப்பணிய தடை (ராஜஸ்தான்)

நீருக்கும் போராட்டம் 

கயர்காஞ்ச்

பத்திரிக்கைகளில்  ஜாதியும் உள்பிரிவுகளையும் போட்டு  பெண் தேடும் மாப்பிள்ளை தேடும்  நாமும் இந்த நாற்றங்களில் ஒன்றே.

மலம் திங்க வைத்தல்,ஒதுக்கி வைத்தல்,கீழே உட்கார வைத்தல்,இரட்டை டம்ளர் முறை இப்படி பலவிதங்களில் நடத்தப்படும் கொடுமைகள் என்றுதான் தீரும்?அடங்கி கிடக்கும் மக்களுக்காக காவல்துறையில் புகார் அளிக்க போனால் ரெண்டு கம்யூனிட்டியும் அமைதியா இருக்கிறது பிடிக்கலையா? என்று அறிவுரை சொல்கிறது காவல்துறை.

இதை கண்டும் காணாமலும் ஒரு இன மக்களின் போராட்டமாகவே ஜாதி போராட்டமாகவோ பார்த்து தவிர்த்து  செல்லுவோமானால் நமது முகங்களும் கோரமானவையே.
நமது முகங்களை  பார்த்து கொள்ள நமக்கு நேர்மை  உள்ளதா?

நடத்தப்படும் ஒவ்வொரு கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் நாம் கொடுக்கும் மௌனம் அக்கொடுமைகளை விட கொடுமையானதே.

இதில் வரும் மதம் என்ற வார்த்தை சாதிகளை கடந்து நிற்கும் பெரிய மனசு படைத்தோருக்கு பொருந்தாது.