Translate

பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூன், 2014

என்னிடம் பிறந்த நாள் பிறந்ததும் வளர்ந்ததும் ....

ஸ்கூலுக்கு கெளம்பற காலை அவசரத்துல எவர்சில்வர் தட்டுல 'லேக்டோ கிங்' சாக்லேட் வைச்சு பக்கத்தூட்டு ராஜேஷ்  தந்த போதுதான் எனக்கு  பிறந்த நாள் அறிமுகம் ஆனது. அந்த சாக்லேட்ட எனக்கு கையில் ஒன்றை தந்தும் அப்பாக்கு முழு தட்டுமாக நீட்டுவான்.அவர் நாசூக்காக ஒன்றை மட்டும் எடுத்து கொள்வார். என்னிடமும்  தட்டோட நீட்டிருக்கலாம் ....

காதல்னு ஒரு பருவத்துக்குள் வந்த போதுதான் பிறந்த நாளும் காதலும் எவ்வளவு அபரிதமான காதல் கொண்டது என புரிய வந்தது.அவளுடான முதல் நாள் சந்திப்பே அவளோட பிறந்த நாள் என்பதால் கிப்ட் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம்.

ஹார்லிக்ஸ்சாப்பிட்டுக்கோப்பான்னு நாகர்கோவில்ல ரத்தம் கொடுத்ததுக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்தத தூக்கிட்டு கிப்ட் கடைக்கு ஓடினேன்.பதினெட்டு வயசு தீவிர  காதலை  விட வெறித்தனமான விலையில் ஒரு போட்டோ ஸ்டாண்ட் ஒன்றை எடுத்து சருகத்தாளில் பொதிந்து கொடுத்ததுதான் நான் கொடுத்த முதல் பிறந்த நாள் பரிசுன்னு சொல்லலாம்.
அப்புறமா ஒரு நாள் அந்த கிப்ட்  அவங்க  அம்மாவின் கோபத்திற்கு அடுப்புக்கு வாக்கப்பட்டு போனதுலாம் காலக்கொடுமை.

அண்ணன் ,காதலி இருவரும் சென்னைக்கு வேலைக்கும் படிக்கவுமாக வந்த போதுதான் அவர்களுக்கும் அவர்கள் மூலமா எனக்கும் பிறந்த நாள் என்பது  கூடுதல் கலையானது.ஆமா பின்ன வாழ்த்துக் கவிதைன்னு அவங்க ப்ரெண்ட்ஸ்க்குலாம்  பொளந்து கட்டினேன்.அவங்க எல்லாரும் நல்லவங்க என்பதால் சேதமில்லாமல் பிழைத்து கொண்டேன்.

காஸ்மீரில் இருந்த காலத்தில் கிரீட்டிங் கார்டும் கடிதமும்  வர காத்திருந்த காலங்கள் தவிப்பானவை.வந்தாலும் ஒளித்து வைத்து  தவிக்க விட்டு பார்ப்பானுங்க பக்கிங்க..இன்று வரை நட்பு தாண்டி குடும்பத்தில் ஒருத்தியாக நிற்கும் நிஷா என்ற தோழியின் இருபத்தெட்டு பக்க கடித வாழ்த்தெல்லாம் சும்மா கல்வெட்டில் வைத்திருக்க வேண்டிய நிகழ்வுகள்.

குறிப்பா காஸ்மீரில் 2002ல் இருந்த போது பிறந்த நாளன்று கம்பெனி கமாண்டர் ரோந்துக்கு அழைத்து சென்றார்.ரோந்து செல்வதில் கைடாக இருப்பது இன்வைட்டடு வம்பு என்பதால் வழி தெரியாது என்று சிலர் பின் வாங்க கோபத்தில் கமாண்டர் வயல் பக்கமா கூட்டிட்டு போய் ,பயர் வருது ,எதிரி அட்டாக் செய்றான்  ஊர்ந்து போங்க ..உருண்டு போங்க ....குட்டிக்கரணம் அடிங்கன்னு மூதாயர் பொறந்த நாளையெல்லாம் சேர்த்து கொண்டாட வைச்சதுலாம் மறக்கவே முடியாது.புது யூனிபார்ம் போடலைன்னாலும் அன்னைக்கு புது ஜட்டி..புது பனியன் போட்ருந்தேன்.ஒரே சகதியும் கண்ணீருமாய் கடந்த அந்த நாள் இன்று சிரிப்பாக இருக்கிறது.

அப்புறமா காதலி மனைவியான பின்னும் முன்னும் அவளுடைய பிறந்த நாள்  ஆர்ச்சீஸ் கேலரியை கற்பழிக்கும் வழக்கத்தோடு ரத்தம் கொடுக்கும் வைபோவமாகவும்  மாறிக்கொண்டது. காதலியாக இருந்தப்பவும் சரி ...மனைவியாக இருந்தப்பவும் சரி...என்னோட பிறந்த நாளை மறப்பதில் அந்தப்புள்ளைக்கு அவ்வளவு சந்தோசம். ஆகச் சிறந்த அந்த கால கட்டத்தில் போன் வெடிக்கும் அளவிற்கு ரகளையான சண்டைகள் எனக்குண்டான பிறந்த நாளை எனக்கே வெறுக்க வைத்திருந்தன.

பிறந்த நாள் என்றால் சிறுவயது போலவே மறுபடி ஒரு வெத்து காகிதமா மாறி மற்றவர்களுக்கு வாழ்த்து அனுப்பி மட்டுமே நகர்ந்த வேளையில்தான் மார்க் அறிமுகம் ஆனார்.அவர் மூலமா பலர் அறிமுகமானார்கள்.வாத்தி ராஜா,அரசன்,சீனு,வசு என நண்பர்கள் காமெடி கும்மியில்  பதிவெழுதி கலாய்த்து பிறந்த நாளை கொண்டாடிய போதுதான் பிறந்த நாள் என்றால் வாயில் வடியும் சிரிப்போடு கடந்து கொண்டிருக்கிறேன்.

இந்த வருடமும் உறங்காமல் போனிற்கு காத்து கிடந்து காலையில் முழித்தால் இலியாஸ் தமது  நண்பரிடம் சொல்லி மெனெக்கெட்டு போட்டோ ரெடி செய்து ஆட்டுக்கு மஞ்ச தெளித்து ஆரம்பித்து வைத்த பின்தான் மனாளினிக்கே மறந்து போனது நியாபகம் வந்திருக்கு.

ஒரு வேளை வயதாகிவிட்டே போகிறது,மரணத்தை நோக்கி செல்கிறோம் என்பதை மறைக்கத்தான் இப்படி கொண்டாடி கொள்கிறோமோ என தெரியவில்லை.செலவே இல்லாமல்....நேரில்  சந்திக்காமல்...முகம் பார்க்காமல் சத்தமாக சிரித்து கொண்டாட இத விட வேறு முகவரி கிடைத்து விடுமா என்ன?

இது வரை கேக் வெட்டியதில்லை. இன்னும் எனக்கு ஹேப்பி பெர்த் டே டூ யு பாடல் முழுசா தெரியாது. அந்த கீறல் விழுந்த ரெக்கார்ட் ப்ளேயரை விட கெடா வெட்டும் பிரியாணியுமா வாயிலேயே வட சுடும் நண்பர்களின் கமெண்ட்ஸ் எவ்ளோ துன்பமானாலும் மறக்கடிச்சுடும்.நாளைக்கே சாவு என்றாலும் கூட ரெண்டு ஸ்டேட்டஸ் போட்டு கமெண்ட் பார்த்து சிரிச்சிகிட்டே சாகலாம் என்கும்போது வாழ்வதற்கு சொல்லவா வேணும் ?

இன்பாக்ஸ்ல் ,டைம் லைனில்,செல்பேசியில் என்று என்னை திக்கு முக்காட செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல இயலாது.வணங்கி கொள்கிறேன்.வணக்கம்.