Translate

மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 செப்டம்பர், 2015

மன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி

இந்த கடிதத்தை படிக்கும் முன் சமூக விரோதிகளால் மத வெறியர்களால் கர்நாடகாவில் கொல்லப்பட்ட கல்பர்கி என்னும் முதிய முற்போக்கு புரட்சிகர எழுத்தாளரின் கொலைக்கு சப்பக்கட்டும் சாருவின் இந்த கருமத்தை ஒருக்கா படித்து விடுங்கள்.நன்றி.

கல்பர்கி
மஹா காமம் பொருந்திய சாருக்கு ..
                                                    தமிழகத்தின் எலக்கிய ஆளுமையான    உனக்கெல்லாம் ஒரு கடுதாசி எழுதுவேன்னு நெனச்சி கூட பார்க்கலப்பா. .ஒன் ஆட்டுக்கெடா தாடியும் ஷோக்காத்தான்கீது.ஆனா மண்டதான் கொஞ்சம் கிராக்கு போல.என்னடா மருவாதியே இல்லாம எழுதுறானேன்னு நென்ச்சிக்காத.இப்பத்தான் ஒன் எழுத்துன்னு ஒரு கண்ராவிய பட்ச்சேன் .ஒரு 77 வயசு ஆள முட்டாள்னு நீ எழுதுறப்ப உன்னயெல்லாம் இத்த விட கயுவி கயுவி  ஊத்தலாம் .ஆனா பாரு நான் சாரு இல்லியே.
மன நோயாளி சாரு 
 
மதத்தை விமர்சிக்க கூடாதுன்னா அந்த மதத்த  வீட்டுக்குள்ள குஞ்சாமனிக்குள்ள கட்டி வைச்சுக்க வேண்டியதுதானே சாரு செல்லம்.வீதில ஏன் ஆட உட்ட? வீதிலன்னு வந்துட்டா கேக்காம கம்னு  போக அது இன்னா   இன்பாக்ஸ்ல நீ போடுற  கடலையா என்ன? சும்மா ஆடுனா பரவால்ல ..நாலு கலரா பிரிச்சு போட்டு நாரகாசமால்லா ஆடுது.

 உண்மை என்னானா உன் மதமும் நம்பிக்கையும் ஒரு கெழவனுக்கு பதில் சொல்ல தெரியாம கொலை செய்ஞ்சிருக்குஅத மஞ்ச மாக்கானாட்டம் நீ சப்பக்கட்டு கட்டுற.தேவதாசி கூட மத நம்பிக்கைதான் அனுப்பி வைய்யேன் ஒன்  வீட்ல இருந்து.அவந்திகா செருப்பால அடிப்பாங்க ஒன்ன..நாறிப்போன வடைல இன்னும் என்னடா தேடிகிட்டு இருக்க நம்பிக்கைன்னு?

கருத்து சொதந்திரம் அவருக்கு இருக்கு.போராடுற சொதந்திரம் ஒனக்கு இருக்கு.எந்த விநாயகன் கொலை செய்ய சொதந்திரம் கொடுத்தான் சொல்லு?விட்டா  போலிஸ் டேசனையும் கோர்ட்டையும் கடல்ல கரைச்சிட்டுதான் புள்ளையார கரைப்ப போல.

அம்பேத்கரை விடவா ஒன் சாதி மதத்த கேள்வி கேட்ற  முடியும்?ஒன் கணக்குப்படி பார்த்தா அன்னிக்கே அம்பேத்கரை கொன்னுருந்தா கூட தப்பில்லன்னு சொன்னாலும் சொல்லுவ நீ. விநாயகர் கடவுள் இல்லன்னு அவர் சொல்ல கூடாதுன்னா வீதிக்கு வீதி ஒரு முக்கு விடாம கோயில கட்டி  விநாயகர் கடவுள்தான்னு சொல்ல யார் கொடுத்தா செல்லம் உரிமை?

மதம் ஒரு போதைன்னு மார்க்ஸ் சொன்னாரு.மதம் மனிதனை மிருகமாக்க்கும்னு பெரியார் சொன்னாரு.மதம் மனிதனை மடையனாக்கும்னு உன் எழுத்து சொல்லுது.அவ்வளவு பெரிய எழுத்தாளுமை மாதிரியா எழுதிருக்க? அத்தனயும் ஓட்ட .புதுசா பேஸ்புக்ல வந்தவன் ஸ்டேட்டஸ் போட்ட மாதிரி...

ஒன் மதம், மசுரு, நம்பிக்கைன்னு  சொன்னதுலாம் வரை சாரு சாருதான் சக்கரக்கட்டிதான் ..ஆனா அதுக்கப்புறமா சொன்ன பாரு இதே வேற மதம்னா இருவது வருசத்துக்கு முன்னமே கொன்னுருப்பாங்கன்னு .மொத்த மூளைலையும் நரித்தனம் நாட்டியமாடுது.போற போக்குல பக்கத்தூட்ல மலம் வீசி பார்க்குற அசிங்கப்பெறவியா நீ? கேவலமா இல்ல இப்படி எழுத?தாயா புள்ளையா பழகிட்டு இருக்குறவன் மேல வெறுப்ப தூண்டுறேயே அசிங்கமா இல்ல? நீயெல்லாம் எழுதலன்னு யார் அழுதா? 

வன்முறைக்கு வன்முறை தீர்வல்லன்னு சொல்லிகிட்டு இருக்குற ஊர்ல பச்சப்படுகொலைய நியாயப்படுத்திட்டு இருக்குது ஒன்னோட சொய இன்பம். அல்ல்லாத்தையும் சொல்லிட்டு எறும்ப கொல்லக்கூட உரிமையில்ல ஒறவு இல்லன்னு கடைசில ஒரு வசனம் வைச்ச பாரு .. நீ சாரு நிவேதிதாவே இல்ல  எழுத்துலக தசாவதார  சாரு ஹாசங்கிறன்.

நல்லா சொல்றன் கேட்டுக்கோ செல்லம்.. 
எங்கெல்லாம் மூட நம்பிக்கை இருக்கோ அங்கெல்லாம் ஒரு கல்பர்கி இருப்பான்.எதிர்ப்பான் கேள்வி கேட்பான்.எழுதுவான்.கொல்லப்பட்ட  நானும் ஒரு கல்பர்கிதான். முடிந்தால் சுட்டுக்கொல் .அழைப்பு விடுக்கிறேன் உனது மத நம்பிக்கை மூடர்களுக்கும்.அவர்களின் ஆகச்சிறந்த கடவுள்களுக்கும்.

இப்படிக்கு -கல்பர்கி 



முக்கிய குறிப்பு-சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுபத்தேழு வயதான ஒய்வு பெற்ற துணை வேந்தர் தான் உண்டு தன் பணமுண்டு என்று வாழாமல் அத்தனை எதிர்ப்புகளை மீறி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடைசி காலத்திலும் போராடிய  ஒருவரை  முட்டாளாக்கினால் அந்த முட்டாளுக்கு  முட்டாள் மொழியில்தான் கடிதமெழுத முடியும்.எனவே பொறுத்தருள்க மென் மற்றும் மேன் மக்களே ...நன்றி.வணக்கம்.

கருத்துரிமைக்கு குரலாக இந்த படத்தை நீங்கள் சமூக வலை தளங்களில் ப்ரோபைல் படமாக பயன்படுத்தலாம்.





புதன், 19 ஆகஸ்ட், 2015

ஒரு நாத்திகனின் திமிர் பேச்சு

பூச்சாண்டிக்கதைகளை நம்பிக்கொண்டிருக்கும் குழந்தைகளாகவே இருக்கிறோம்  இன்னும்.சொல்லப்போனால் குழந்தைகள் சூப்பர் மேன்களையும் சோட்டா பீம்களையும் ரசிப்பதோடு முடித்துக்கொள்கின்றனர். தடித்த புத்தியுடைய நாம்தான்  அவதாரக்கதைகளை  அறிவியலாக்கி நிரூபிக்க  அலட்டிக்கொண்டிருக்கிறோம்.

பரந்த வெளியில் பறப்பதை பைத்தியமாகவும் அடைக்கப்பட்ட கூண்டில் அம்மணமாய் கிடப்பதை சுதந்திரமாகவும் கற்பித்து கொண்டிருக்கிறது  ஆன்மீக ஆகமங்கள்.விழி திறந்த சர்ப்பத்தை வில்லனாகவும் தோட்டம் விட்டு துரத்தியவரை துதி பாடியும் திரிகிறது அடிமைக்கூட்டம்.

உபவாசம் நோன்பு விரதமென ஒரே செயலுக்கு ஒன்பது வார்த்தைகள்  வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மொழி புரியாது போனாலும் பசிக்கும் வயிற்றில் பைத்தியம் போல பக்தி பாடிகொண்டிருக்கிறோம் பரவசமாக ..

அரிதாரங்களின் தாழ்வாரத்தில் அவதார தெய்வங்கள் பிறந்து கொண்டிருக்கும் அதே கணத்தில்தான் பாலில்லா முலையில் முட்டி இறக்கின்றன பச்சைக்குழந்தைகள். மாடுகளை பலியிட்ட தயக்கம் தளர்ந்து மனிதனை பலி போட்டு பரவசமடைகிறது மதி கெட்ட மடையர்கள் உலகம்.

அரூப கடவுளின் அக்குளுக்குள் எடுக்கும் அரிப்பை சொரிந்து கொள்ள ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கிறது நமது கல்வியறிவு.அழகிய நதியின் அடிவயிற்றில் யாகங்களின் சாம்பல்கள்,புரண்டோடும் அழுக்காய்  பூஜைகளின் பாவங்கள். அசுத்தமாக்கும் அத்தனைக்கும் அலங்காரமாய்   இறை நம்பிக்கை பாவனைகள்.

அவசியமில்லா கடவுளுக்கு ஆயிரமாயிரம் கோவில்கள்,அரை ஜான் வயிற்றிற்கு அன்னமின்றி அலைந்து சாகிறது ஏழை ஜனம். தெய்வத்தின் திருவடியில் பலி கேட்கும் பூசாரியாக வடிவமிடும் ஜாதி முகங்கள் அந்த கண்மூடி கடவுளைக்காட்டிலும் கோரமானது.

இறை நம்பிக்கை தனிமனித கோடு கடந்து முக்குத்தேருவின் முனை வரை கோவில் கட்டி வாழ்கிறது.அவசரத்துக்கு வழியின்றி முட்டுச்சந்து நாறுகிறது. மனிதன் கட்டித்தான் கடவுள் வாழ வேண்டுமெனில் மனிதனல்லவா கடவுள்?எந்தக்கடவுள் பால் கேட்டான்? எந்தக்கடவுள் உண்டியல் வைத்தான்? எந்தக்கடவுள் மயிர் கேட்டான்? அப்படித்தான் ஒரு கடவுள் இருப்பாரெனில் அவர் ஒரு ஓரமாக இருந்து விட்டால்தான் என்ன?

அத்தனையும் மோசடி. அங்கிங்கெனாத படி நீக்கமற நிறைந்திருக்கும் பகவானின் முன்பு அவன் பெயரிலேயே மோசடி.பணம் பறித்து உண்ட கூட்டம் இப்போது பதவி கோதாவில் பழக்கிப்பார்க்கிறது பைத்தியக்கார கடவுளை.பலியாகி கொண்டிருக்கும் நாம் பவிசாக கூவுகிறோம் ஜெய் ஸ்ரீ ராம்... 

படையலின் பெயரில் ஏப்பமிட்டு கொண்டிருக்கும் அந்த குருசுவாமிகள்தான்,ஆண்டவன் பெயரில் ஆட்சி செய்ய துடிக்கும் அரசியல்வாதிகள்தான் பூச்சாண்டிகள் என்றால் நம்பவா போகிறீர்கள்? நமது மத நம்பிக்கைகளில் நடனமாடிக் கொண்டிருக்கிறது கட்சிகளின் நாற்காலி ஆசைகள். அரசியல் பூஜைக்கு மனித ரத்தம் கேட்கிறது மதக்கலவரங்கள்.கடவுள்களை போலவே வடிவமைக்கப்படுகிறது கலவரங்களும்.

இன்னொரு முறை ஏதேன் தோட்டத்து சைத்தானின் சர்ப்பம் கண்டால் அத்தனை ஆப்பிளையும் கேட்டு வைப்போம் நல்லது கெட்டது அறிந்து கொள்ள. கண்முன்னே உண்மை உரைக்கும் அறிவியலை  விட காணக்கிடைக்கா கற்பனைகளில் கவிழ்ந்து கிடக்கும் நாம் தொடர்ந்து  நம்புவோம் சர்ப்பங்கள் வந்து பழம் கொடுத்து பாடமெடுக்கும் என்று.....ஆமென்.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

துப்பாக்கிக்கு ஓய்வில்லாது போயிருக்கும் நேதாஜி ....

மாபெரும் தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்க்கு 

சற்று சீக்கிரமாகவே சென்று விட்டாய் நீ
உனது துப்பாக்கிக்கு ஓய்வில்லாது போயிருக்கும்...

நீ கொடுத்த நெருப்பில்
கொளுத்தப்படுகிறது குடிசைகள் ...
நீ கொடுத்த சுதந்திரத்தில்
களித்து கிடக்கிறது முதலாளிகள் கூட்டம்!

வெள்ளையனை வேண்டியவன் மாவீரன்
காந்தியை கொன்றவன் கடமை வீரன்
சிலைகளில் சிரிக்குது தேசம்
வலைகள் பின்னுது மத வெறிக்கூட்டம் !!

நீ விட்டு சென்ற ராணுவமோ
வேலி வைத்து காவல் காக்க ..
கதவுகளை திறந்து களவுக்கழைக்குது
களவாணி கட்சிகளின் கவர்மெண்டுகள்!

நீ சிரித்து புரள ஒரு காட்சியுண்டு தலைவா...
மதயானைக் கூட்டமொன்றின் ஊர்களில்
உனக்கும் மஞ்சளடித்து வைத்துள்ளனர்
தெய்வத்திருமகன் ஜாதியாக .....சிரித்து கட !


நீ நினைத்த நாடல்ல இது...
நீ நினைத்த சுதந்திரமல்ல இங்கு...
கோட்சேக்கு கொடி பிடிக்கும் தேசத்தை
நீ காணாது கடந்ததே நலம் !


சீக்கிரமாய் சென்று விட்டாய் தலைவா நீ ...
உனது துப்பாக்கிக்கு ஓய்வில்லாது போயிருக்கும் !!

-சதிஷ் செல்லத்துரை

வெள்ளி, 9 மே, 2014

இந்துத்துவாவை மறைமுகமாக வளர்ப்பவர் யார்?-திரு.கோவி கண்ணனுக்கு பதில் பதிவு

பதிவர் திரு கோவி கண்ணனின் இந்தப்பதிவை  மேற்போக்காக கவனித்தால் அவரின் எதிர்கேள்விகள் நியாயமானவையாக இருக்கும்.ஆனால் உண்மையில் அவரின் வாதங்கள் அபத்தமானவையாக தோன்றியது எனக்கு.கீழே சிகப்பு வண்ணத்தில் உள்ளவை அவரின் பதிவாகும்.

இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.
காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

காலம் காலமாக நீங்கள் சொல்லும் இந்தியர்கள் எந்த காலத்திலிருந்து லெட்சுமியை நம்பினார்கள்?ஆங்கிலேய ஆட்சியில்தான் இநதியா என்று ஒன்று உருவானது என்றும் அது சுதந்திர இந்தியாவாக மாற  காலம் காலமாக வாழும் இந்துக்கள் மட்டுமல்லாது மதம் மாறியவர்களும் போராடினார்கள் என்பதை மறந்து விடலாகாது.அவர்களில் பலர் பாகிஸ்தான் செல்லாதது  இந்த மதச்சார்பின்மை அரசின் மீதான நம்பிக்கையில்தான்.அந்த அரசு ஒரு மதத்துக்கான கடவுளை அதன் குறீயீடுகளை முன்னிறுத்துவதை என்னவென்று அர்த்தம் கொள்ள?

"இஸ்லாமியர்கள் எதிர்ப்பு "என்று  செய்தியை தந்த ஊடகத்திற்கு இருந்த குசும்பை அப்படியே கோவி அவர்களும்  வாந்தி எடுத்தது அறியாமையா? ஏனெனில் அவரின் பதிவின் பின்னூட்டத்திலேயே செய்தியின் விபரம் தரப்பட்டுள்ளது சகா  என்பவரால்...  

###ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் சாத்தியம் என்றால் எல்லா மத கடவுளையும் போடவேண்டும் இல்லையேல் இதுக்கு வருத்தம் தெரிவித்து சர்ச்சைக்கூரிய இந்த நாணயங்களை திரும்ப பெற வேண்டும். //
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=119002###

'எல்லா மத கடவுள் படமும் வெளியிட இஸ்லாமியர் கோரிக்கை' என்றும் பத்திரிக்கைகள் செய்திக்கு தலைப்பிடலாம்...போண்டியாகாதே.

'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?

கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?


கறிக்கடை பாய் ஒன்றும் அரசாங்க கடை இல்லை.காய்கறி கடையானாலும் அவனவன் மத கடவுளை கும்பிட்டுதான் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான்.அதனால் இஸ்லாமியன் இந்து கடையிலும் கிருத்துவன் இஸ்லாமிய கடையிலும் போகாமவா இருக்கிறான்.எதுல எதை தேடுகிறீர்கள்? உங்களுக்கு அப்படியேதும் ஆசையா என்ன? இல்லை மறைமுக மிரட்டலா? .

ஒலிபெருக்கியில் அல்லாஹ் அக்பர்,அல்லேலுயா ,சரணம் ஐயப்பா,கடவுள் இல்லவே இல்லை என அனைத்தும் ஒலிக்கத்தான் செய்கிறது.அந்த சுதந்திரம்தான் மதச்சார்பின்மை.அதில் ஒரு மதத்துக்கு மட்டும் அரசாங்கம் ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்தால்? தனி மனிதனுக்கும் அரசின் செயல்களுக்கும் வேறுபாடு இல்லியா?

உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.

இந்தோனேசியர்கள் போல இங்கேயும் மாற்று மதத்தினரின் கடவுள்களுக்கு மதிப்பளியுங்கள் என்றுதானே கேட்கிறார்கள்.

தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்ப்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?

மீண்டும் மீண்டும்  'எதிர்ப்பு' என்ற வார்த்தையை கூறி அரசியல் ஆதாயம் தேடுவதை போல உள்ளது இந்த வாதம்.அதைத்தான் தற்பொழுது வேகமாக கட்டமைத்து ஆட்சிக்கு அடி போடுகிறார்கள் ஒரு சில கட்சியினர்.தெலுங்குக்கு எதிராக தமிழர் ஒற்றுமை ....இஸ்லாமியருக்கு எதிராக இந்து ஒற்றுமை ,தலித்துக்கு எதிராக அனைத்து சாதி கூட்டமைப்பு என அரசியல் ஆதாயத்துக்கு கட்சியினர் செய்யும் சூழ்ச்சி பிரச்சனைகளை தருமே அன்றி தீர்வை அல்ல.

மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.

இஸ்லாமிய கடைகளில் பொருள் வாங்காதே என்ற கோஷம் இஸ்லாமியர்களைத்தான்  எதிர்க்கிறது(அரசை அல்ல).ஆனால் இஸ்லாமியர்கள் அரசின் ஒரு பக்க சார்பை எதிர்க்கின்றனரே அன்றி இந்துக்களை அல்ல.அதுதான் வித்தியாசம்.இதில் இந்துத்துவத்தை வளர்ப்பது இந்துத்துவம் என்ற வார்த்தையை கண்டுபிடித்த சிலரின் பரப்புரையே அன்றி வேறென்ன? அரசின் மீதான விமர்சனத்தை இந்துக்களின் மீதாக திரித்து விடும் சூழ்ச்சி தெரியவில்லையா?

இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் நாட்டின் கோபுர சின்னம் ஒருவேளை இப்போது அமைவதானால் கட்டாயம் எதிர்ப்பு கிளம்பியிருக்கலாம்.ஏனெனில் இணக்கத்தோடு வாழ்ந்து வரும் சமூக அமைப்பில் பெருந்தன்மையை,அரவணைத்து அழைத்து செல்வதை முட்டாள்தனமாக சித்தரித்து வரும் கூட்டணிகள் பெருகி வரும் சூழ்நிலையில் தற்போது எதிர்ப்பு கிளம்பலாம்.இதற்கு முன் ஏன் யாரும் எதிர்க்கவில்லை என்று யோசித்தால் விடை என்னவாக இருக்கும்?

மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?

கட்ட கடைசில அரசை மாற்ற சொல்லி சொல்லிருக்கிறார் கோவியண்ணா.ஆனா அதுவும் நம்ம அரசை அல்ல. முதல்ல உங்க நாட்டுல கேளுங்கடான்னு கேட்டுட்டா என்ன செய்றதுன்னு இங்கே இப்படி இஸ்லாமியர்கள்  நினைக்குறாங்களோ என்னவோ? :)

மதம் ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு உள்ளது இந்தியாவில்.ஒருவர் தமது வலைப்பூவில் வெளியிடும் பதிவிற்கும் அரசு தமது அறிக்கையாக தருவதற்கும் வித்தியாசம் இல்லியா? 

இங்கு அறுதிப்பெரும்பான்மையான இந்துக்கள் மிக இயல்பாக மாற்று மதத்தினரோடு அன்பு பாராட்டி வாழ்ந்து வருகின்றனர்.சுக துக்கங்களில் பங்கு கொள்கின்றனர்.தற்போதைய சூழ்நிலையில் அதற்கு பங்கம் வரும் ஆபத்து வேதைனைக்குரியது. 

கேடு கெட்ட அரசியலுக்கும் ஆட்சிக்கும் ஆசைப்பட்டு மக்களின் ஒற்றுமையை உடைப்பது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.வளரவேண்டியது இந்துத்துவமோ இஸ்லாமியத்துவமோ அல்ல.அன்புத்துவமே.

எல்லா மதத்தின் படத்தையும் அச்சிடுவதை விட யாதொரு மத கடவுள்கள் படமும் இல்லாத படமாக அச்சிடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

இலங்கையில் ஸ்ரீ என்ற எழுத்து பெரும்பான்மை சிங்களர்களின் குறியீடாக தமிழர்களுக்கு தோன்றியது போலத்தான் இதுவுமா? கருத்துக்களை பகிரலாம்.



இது பின்னூட்டமாக அந்தப்பதிவில் இடப்பட வேண்டியது.ஆனால் பெரிதாகிப்போனது பதில்.அத்தோடு இதை பதில் பதிவாகவும் இட மனதில்லாமல் இருந்தேன்.காரணம், கோவியண்ணாவின் பதிவு வந்து  ஒரு மாதத்திற்கு மேலானதாலும்  தீவிரவாதி என்றும் இஸ்லாமியன், இஸ்லாமிய ஆதரவாளன் என்றும் எனது மேலான முத்திரை விழுந்துள்ளதாலும் ஒரு தயக்கம் இருந்தது.

நம்மால்தான் இருக்க முடியாதே....போட்டாச்சு.....விவாதிக்கலாம்.கருத்துக்களை பகிருங்கள்.வெளியே சொல்ல மனசில்லையானாலும் நியாய தர்மத்தை ஒத்துக்கொள்ளும் பக்குவம் அடுத்தடுத்த பதிவுகளில் வெளிப்படலாம்.நன்றி.


வியாழன், 1 மே, 2014

குண்டுவெடிப்பு- துண்டாடப்படும் ஒற்றுமை

சென்னையில் குண்டுவெடிப்பு......ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக் இருந்தாலும் அதன் செய்தியாளரை மூச்சு விடாமல் பதட்டமாக பேச விட்டு உங்களையும் அதன் ஓட்டத்தில் இணைத்திருப்பர்.அந்த பதட்டத்தை அது தனக்கு கூலி கொடுக்கும் கட்சிகளுக்கோ இல்லை அது சார்ந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ குற்றவாளியாக முன்னிறுத்தும்.அந்த குற்றவாளிகள்தான் நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு.

புதியதலைமுறையில் குண்டு வெடிப்பு என்று முக்கிய செய்தி ஓட செய்தியாளர் இது குண்டுவெடிப்புதானா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் என கூறுகிறார்.பரவாயில்லை கண்முன் நடந்ததுதானே விடுங்க.அதனை தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையை தகர்க்க திட்டமிடப்பட்டது குரிப்பிடத்தக்கதுன்னு முத்தாய்ப்பாக தமது எதிராளியை குற்றவாளியாக நிறுத்துகிறது..

ஒரு குண்டுவெடிப்பிற்கு பின் எந்த அடிப்படையில் இவர்களாக தீர்மானிக்கிறார்கள் என தெரியவில்லை.இப்படியான சூழ்நிலையில் காவல்துறை பல தீவிர ஆய்வுகளுக்கு பிறகே தமது விசாரணையின் கோணத்தை ஆரம்பிக்கும்.

வெடிகுண்டின் மூலப்பொருட்கள் என்ன? அது அதிகமாக கிடைக்குமிடம் எது? அதன் விற்பனையில் யார்? யார்? இதற்கு முன் இப்படியான மூலப்பொருட்கள் அடங்கிய குண்டு வெடிப்ப்பு யார் செய்தது? எங்கு?அவர்களுக்கு இங்கு ஆதரவு நிலை எப்படி?

குண்டு வெடிக்கப்படும் விதம் வேறு சம்பவங்களோடு ஒத்து வருகிறதா? அதில் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புக்கு இங்கு வாய்ப்புள்ளதா? அனுதாபம் உண்டா? நாள் ,கிழமை என பல விடயங்கள் ஆராயப்படும்.

குண்டு வெடிக்க வைக்கப்படும் விதம் கொண்டும் விசாரணை அவசியப்படும்.ரிமோட் எனில் ஆள் அந்த பகுதியில்தான் இருந்துள்ளான்.வேறு முறைகள் எனில் அந்த குண்டு எங்கு பொருத்தப்பட்டது? அந்தப்பகுதிகளை குறித்த விசாரணை...

குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள சமூக பிரச்சனைகள்,அதன் தீவிரம் என்ன?
இப்படியாக இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் அதற்கு  முன்னேயே ஊடகங்கள் தமது எதிரியை இல்லை எவரையாவது குற்றவாளியாக்கி கொலை செய்ய துடிப்பதுதான் வேதனையே.

இதனைப்போன்ற தொடர் செய்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தல் மூலம் மிகப்பெரும் நஞ்சை விதைத்து வருவது புரிகிறதா? நெல்லை என்பதால் எனது தம்பி மட்டும் ஒரு ஹோட்டலில் அருவா கத்தி இருக்கிறதா என சோதிக்கப்பட்டபோது கூனி நின்றான்.அதை இஸ்லாமியர்களுக்கு பொருத்தி பார்க்கும்போது உண்மையை புரிந்தும் கொண்டான்.

திருநெல்வேலியில் கொலை நடந்தது என்பதால் நானும் கொலைகாரனா?அங்கு சாதி கலவரம் நடந்தால் நானும் சாதி வெறி பிடித்தவனா? இல்லை மத்த ஊரில் கொலைகள் நடக்கலியா? மத்த ஊர்களில் சாதி வெறியே இல்லியா?அனைத்தும் அனைத்திலும் உள்ளது.ஆனால் ஹரி காட்டியதும் விதைத்ததும் நெல்லையாச்சே....

இதனை இஸ்லாமியர்களுக்கும் பொருத்தி பாருங்கள்.உங்களோடு பணிபுரியும் இஸ்லாமியர்,இங்கு பதிவெழுதும் இஸ்லாமிய பதிவர்கள்,உங்களோடு பள்ளியில் படித்த இஸ்லாமியர் இவர்கள் வெடிகுண்டுகளோடு சுற்றுகிறார்களா என்ன? என்னோடு படித்த சாகுல் ஹமீது டீக்கடையில்தான் வேலை பார்க்கிறான்.அவனையும் ஸ்லிப்பர் செல் என்று வக்கிர எண்ணத்தின் நவீன பதிப்பான துப்பாக்கியில்  முருகதாஸ் எச்சரிக்கை செய்கிறார்.இயல்பான ஒருவனின் வாழ்வை உடைத்துப்போட்டு அவனை தீவிரவாதியாகவே மாற்றி விடுதல் சரிதானா?

மல்டிப்ளக்ஸ் மாலில் ஆயிரம் கண்கள் தையலிடப்பட்ட செருப்பையே உற்று நோக்குவதை போல கூனி நழுவி செல்லும் நிலையில் நம்மோடு உடன் வாழும் ,நம்மைப்போலவே அண்ணாச்சி கடையில தேங்காய் சில்லு கடன் வாங்கி துவையலும் பழைய சாதமுமாகத்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் பல இஸ்லாமியர்கள்..எங்கிருந்து வந்தது வெறுப்பு?

பயணங்களில்,தங்கும் விடுதிகளில்,கல்லூரிகளில்,வேலை பார்க்குமிடத்தில் என ஒவ்வொரு இடத்திலும் நம்மோடு பயணிக்கும் சக மனிதனை சந்தேகிக்க தூண்டியது அரசியலன்றி வேறென்ன?

சக மனிதனை தனிமைப்படுத்தும் இந்த செயலை அப்படியே ஏற்றுக்கொண்டு சமூக வலைதளங்களில் இணைந்து கொண்டு  சமூகத்தை உடைத்து போடுகிறோம் நாம்.

சமீபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் பிணத்தில் பார்ப்பனனை கண்டு பிடித்த மேதாவித்தனத்திற்கும் வக்கிரத்திற்கும்  சற்றும் குறைவில்லாதது இஸ்லாமியனை தீவிரவாதியாக சித்தரித்து சிரிக்கும் வக்கிரம்.

ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் பிழைத்து வாழும் ஒரு இஸ்லாமியன் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு கொண்டிருக்கிறான்.குஜராத் கொலைவெறியில் ஆவேசமாக வாளேந்திய அசோக் மோசசி என்பவர் இன்னும் அசோக் மோசசியாகத்தான்  (மோசசி-செருப்பு தைப்பவர்) இருக்கிறார். தூண்டி விட்ட அரசியல்வாதிகள் மந்திரிகளானார்கள்.பிரதமராக வரும் வாய்ப்பு  வரை முன்னேறுகிறார்கள் .ஆனால் மோசசி?இன்னும் செருப்புதான் தைத்து வருகிறார்.

என்னால் உறுதியாக சொல்லமுடியும்...ஒவ்வொரு இந்தியர்களிடத்தும் இந்துவாக்கி இஸ்லாமியனை எதிரியாக்கி இந்துக்களை ஒன்றுபடுத்துவதாக அரசியல் லாபம் பார்ப்பதுதான் கட்சிகளின் திட்டமிடப்பட்ட ஒற்றுமை உடைப்பு பரப்புரைகளும்  ,செயல்பாடுகளும் .

ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் பணம் கிடைக்கலாம்..நமக்கு இழப்பில்லையா?நாஞ்சில் மனோவின்  மூக்கு துடைத்துவிட்டு தோசை ஊட்டிய முஸ்லிம் அண்ணாச்சியை  கடைசி காலத்தில் தனித்து செல்ல விரட்டியதை தவிர வேறென்ன கிழித்தது இந்த மதப்பற்று? வாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாகத்தான் விளையாடவும் படிக்கவும் பழக்கியிருந்தனர்.உங்கள் பிள்ளைகளை எப்படி அனுமதிக்க போகிறீர்கள்?


எண்ணற்ற சந்தேகக்கைதிகளாக வாழ்வை தொலைத்து கிடக்கும் அப்பாவிகளுக்கும் நிமிர்ந்து உரிமை கொண்டாடிய ஊரில் செய்யாத தவறுக்கு வெட்கி குனிந்து செல்லும் பாசக்கார அண்ணாச்சிகளுக்கும் இந்தப்பதிவு அர்ப்பணம்.


புதன், 16 மே, 2012

மனிதம் வளர்ப்போம் மதம் தவிர்ப்போம்

ஒரு பக்கம் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த பதிவான

காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்..

  பதிவிற்க்கு எனக்காக இறைவனை வேண்டி பின்னூட்டம்  எழுத...இன்னொரு பக்கம் பதிவுலகத்திற்கு புதியவன் என்பதாலோ என்னவோ கொஞ்சமா சிலர் அறிவுரை  வழங்கினார்கள்.என் கடந்த பதிவிற்க்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதிலாகவே இந்த பதிவை கருதுகிறேன்.
                       இந்த பதிவும் என் அனுபவமே..1999 ல் அப்போது எனக்கு காதல் பூத்த நேரம்..எனது வீட்டில் காதலை மறப்பதற்காக சூரத் அனுப்பி வைத்தனர்.குஜராத் மாநிலத்தின் சூரத்தில், லம்பி ஹனுமான் ரோட்டில்  எனது சொந்தத்தில் சிலர் வைரம் கட் பண்ணும் தொழிலிலும்,சிலர் லேத்திலும் பணி செய்தனர்.
                          நாங்கள் இருந்த அறையில் மொத்தம் 13 பேர்.நான் சென்ற இரண்டாம் நாள் என் காதலி காதல் சொட்ட சொட்ட கொடுத்திருந்த ஒரு தாஜ் மஹால் பரிசை சுவற்றில் தொங்க விட்டபோது மறுக்கப்பட்டது.காரணம் முஸ்லிம் அடையாளம் எதுவும் இருக்க கூடாதாம்.பயம். முன்னெச்சரிக்கை.ஏதேனும் பிரச்சனை என்றால் இந்துக்கள் நிறைந்த இடத்தில் நாம் இதன் பொருட்டு தாக்கப்படலாம் என்றும் கூறினர்.நான் நம்பவில்லை. இதெல்லாம் வெளியே இருந்தால் நான் காதல் அது இதுன்னு கவனம் இல்லாமல் இருப்பேன் என்று இப்படி சொல்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.
                              லேத்தில் வேலை செய்யும் என்னை விட வயது குறைவான ஒரே ஒரு முஸ்லிம் நிஸாந்த் என்று பெயர் .ஆனால் அங்கு அவனை அனைவரும் அழைப்பது ராஜு என்று.காரணம் பயம்.தான் தன் சொந்த பெயரை மாற்றி வாழும் அவலம்  அன்றைய நிலையில் எனக்கு சரியான முறையில் உரைக்கவில்லை என்றாலும் இன்று யோசித்து பார்க்கும்போது மிக கொடுமையாக தெரிகின்றது.
                                சற்று கூர்ந்து கவனித்தால் நிறைய இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் கடைகளுக்கு பொதுவான பெயர் சூட்டியிருப்பர்.பயமா? வியாபாரம் பாதிக்குமா?மத சார்பற்ற நாடு என்றும் ஜனநாயக நாடு என்றும் நாம்தானே அதிகம் பேசுகிறோம்.அப்புறம் ஏன் இந்த நிலை?
                                   கடந்த விடுமுறையில் பாளையங்கோட்டை மனித நேய முன்னேற்ற கழகம் சார்பில் இலவசமாக computer hardware கற்று கொடுத்தனர்.நானும் பயன் பெற்றேன்.இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கிறார்கள்.பொதுவில் நல்லவிதமாகவே பழகும் அனைவரும் இணையத்தில் அடித்து கொள்ளும் அவசியம் என்ன?
                                  என்னோடு படித்த சாகுல் ஹமீது  நெல்லை SBI அருகில் தேனீர் கடை நடத்துகிறான்.அவனும் பயங்கரவாதியா? என்னுடன் BSFல் துப்பாக்கி ரிப்பேர் செய்யும் துறையில் இருந்து தற்போது ஒய்வு பெற்று தேனியில் வசிக்கும் இஸ்மாயில் அண்ணன் வேறு  இடத்தில்  துப்பாக்கி செய்ய சென்று விட்டாரா என்ன?அவரும் பயங்கரவாதியா?கடந்த 2009-10ல் நானும் பயிற்சி கொடுத்த காஷ்மீர் பசங்க இன்று எல்லையில் காவல் காக்கிறார்கள். அவர்களும் மதவெறி பிடித்தவர்களா?பயங்கரவாதிகளா?தன் மதத்தை தீவிரமாக கடை பிடிக்கும் இஸ்லாமியர்களை மதவாதிகள் என்று பொத்தாம்பொதுவாக கூறுவது சரிதானா?தயவு செய்து மனிதம் வளர்ப்போம்.மதம் தவிர்ப்போம்.அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன என்பார்கள்.அப்புறம் ஏன் இந்த வெறி?
                                         கடந்த பதிவில் அன்பு காட்டியும் அறிவுரை கொடுத்ததும் பின் ஊட்டம் கொடுத்த சகோதரர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  

டிஸ்கி:நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை.