Translate

பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 டிசம்பர், 2014

முதல் பக்கத்தின் முந்தைய பக்கம் - நூறாவது பதிவு...!!

உங்களுக்கும் எனக்கும்
பொருந்தாத எழுத்தெல்லாம்  
இரைந்து கிடக்கிறது 
காதலாக ... நட்பாக ....

நூறாவது பதிவில், முதல் பதிவின் முந்தைய பக்கத்தை பதித்து பார்க்கிறேன் இங்கே...

ஆட்களும் அறியாது, ஆங்கிலமும் தெரியாது,கணினியும் புரியாது தளம் காண களம் இறங்கி மேளம் கொட்டியதில் பிறந்ததுதான் இந்த 'தம்பி'.

எனது இணைய கூட்டின் ஒவ்வொரு இழையிடமும் எம்மொழியில் கேட்டாலும் தமிழ் மொழியில் சொல்லும் பிளாக்கர் நண்பன் பாசித் பெயரை. அப்துல் பாசித் என்ற அந்த அடக்க உருவத்தின் தமிழ் வழி வழிகாட்டல் பதிவுகள் இல்லையெனில் முதல் எழுத்தே முற்றுப்புள்ளியாக முடிந்திருக்கும்இந்த தம்பிக்கு.

அப்துல் பாசித் 
கட்டிய கூட்டில் கலவி செய்ய இயலாமல் கலவரம் செய்தது தமிழ் மொழி தட்டச்சு.கவுரவ நாயகனாய் அதற்கும் விடை தந்தது கற்போம் தளத்தின் தமிழில் டைப் செய்வது எப்படி என்ற பதிவு. நம்புங்கள் என்னை விட மேற்படிப்பு படித்து ஆங்கிலம் கதைக்கும் பலருக்கு தமிழில் எழுத வழிகாட்டுகிறேன் கற்போம் தளத்தின் இந்தப்பதிவின் மூலம் மூலம்.
அந்த ஒல்லிப்பிச்சான் கற்போம் பிரபு கிருஷ்ணா காட்டிய வெளிச்சத்தில்தான் இன்று  ரௌத்திரம் பழகுகிறான் இந்த தம்பி.

'கன்னி'ப்பதிவு என்பதாலோ என்னவோ முதல் பதிவில் கை குலுக்கி  இந்த தம்பியின்  கைப்பிடித்து நடந்து,  கை காட்டி திருத்தி , கை கொடுத்து அறிமுகங்கள் செய்து ,கை தட்டி பாராட்டி என தம்பியின் பயணத்தில் இன்றும் இறக்'கை'யாக இருக்கும் திடங்கொண்டு போராடும்  சீனுவின் கை என்பது கையல்ல...தம்பியின் பலமாகும்.
சீனு 

முகவரி கொடுத்த இந்த மூவரையும்  பதிவுகளாகத்தான் அறிவேன். அதன் பின் சென்னையின் ரோட்டோரக்கடையில் ஒன்றாக இட்லி சாப்பிடும் அளவுக்கு இணைத்தது இணையம் என்பதால்தான் இணையம் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ?

அடுத்தடுத்த பதிவுகளில் இஸ்லாமிய நண்பர்கள் இறை வணக்கத்தோடு நெகிழ்ந்த வேளையில்தான் முதன்முதலில் இந்த ஊடகத்தின் பலம் உறைக்க ஆரம்பித்தது. உறங்கிக்கிடந்த உணர்வுகள் விழித்துக்கொண்டு எல்லை முதல் கருவறை வரை வரைந்த போதெல்லாம் உள் மனசு பறையடிக்கும் வேலைக்கு ஆபத்தென்று... அப்பாவி ஆன்மாக்களின் அன்றாட வாழ்வியலை விட அது ஒன்றும் அத்தனை ஆபத்தல்ல என்கிறது மறு மனசு.

கணேஷ் பாலா வாத்யார்,முத்தரசண்ணே,விக்கியண்ணே,ஆபிசர் அண்ணே, வாத்தி ராஜா,கரைசேரா அலை அரசன்,ஸ்கூல் பையன்,ப்ளேடு கார்த்தி,தமிழ்வாசி ,ராம்குமார் ,கோவை ஆவி ,சசி மோகன்,ஹாரி,இலியாஸ்,அப்துல் பாசித்,பிரபு கிருஸ்ணா,ரூபக்,துரை,வெற்றிவேல்,ஜானி,ராஜியக்கா,அமுதாக்கா,தென்றல் சசிகலாக்கவும் பசங்களும்,அகிலாக்கா,எழிலக்கா,ஏஞ்சலின் அக்கா
 மற்றும் பல நட்புகள் எழுத்து தாண்டி அலை பேசியில் சொந்தம் பாராட்டும் பாக்கியம்தான் நான் கேளாமல், இல்லாத கடவுள் கொடுத்த இணைய வரம்.

இணைய உலகின் சண்டக்கோழி கிராமத்து கருவாச்சி எனது ஊர் என்றும்,எனது தங்கை என்றும் குடும்பப்பாட்டு பாட வைத்ததும் இந்த இணையம்தான்.

ஒருமுறை கடன் குறித்து ஸ்டேட்டஸ் இட்டபொழுது போனில் அழைத்து பண உதவி செய்ய தயாரான வாத்தி ராஜாவும்,  புத்தகங்கள்  வாங்கியனுப்பி காசு பற்றி பேசாமல் மணிக்கணக்கில் அலைபேசியில்  ஊர்ப்பேச்சு பேசும் அரசனும் இனிய உதாரணங்கள் இந்த நட்புக்கு.

தனிமையான தருணங்களிலும்,கவலையான கணங்களிலும் என்னை ஆறுதல் செய்யும் இந்த இணைய வழி நட்புகள் வழியாக நான் உலகின் எங்கிருந்தாலும் சொந்த வீட்டில் சுளுக்கெடுக்கும் இன்பத்தை அனுபவிக்க கிடைத்தது பாக்கியமே.

இந்த வருட பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள மனைவிக்கும் மகனுக்கும் விடுமுறை கிடைத்து,டிக்கெட்டும் எடுத்து  நான் மட்டும் கிளம்ப இயலாத சூழ்நிலை.. மன்னிக்கவும்.அடுத்த வருடம் சந்திப்போம் என உறுதியாக நம்புகிறேன்.

இதனையெல்லாம் தாண்டி பதிவராக இல்லாமல் ஒரு வாசகராக  தொலைபேசியில் அழைத்து பாராட்டியும், நலம் விசாரித்தும் ஆச்சரியப்படுத்தும் தியாகு என்ற நண்பரை குறிப்பிடாமல் முழுமையாகாது இந்தப்பதிவு. நன்றி தியாகு.

 உங்களுக்கும் எனக்கும் 
பொருந்தாத எழுத்தெல்லாம்
இரைந்து கிடக்கிறது
காதலாக...நட்பாக...

ஒரு அனாதையப்போல்தான் 2012ல் இந்த வலையுலகத்தின் கீ போர்டில் விரல் வைத்தேன் .மொத்த உலகத்தையும் சொந்தமாக்கி கொண்ட திருப்தியோடு  இக்கணத்தில்  மரித்தாலும் மனதார மரித்து செல்ல மனதாயுள்ளேன்.ஆமென்.

தொடர்ந்து பதிகிறேன்..கருத்துக்கள் மோதிக்கொல்லட்டும் .... நாமல்ல ...நன்றி.வணக்கம்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆட்டோ ஓட்டுதலும் பதிவு போடுதலும் -பதிவர்கள் கவனத்திற்கு

"அரிசியென்று அள்ளுவாரும் இல்லை, உமி என்று ஊதுவாரும் இல்லை "னு  மொக்கையா சில பதிவுகளை போட்டுட்டு கவலைப்பட்ட நேரம் தம்பி சீனு என் வலை தளத்தை  தமிழ் மணத்துல இணைத்து விட்டாருங்க.

தமிழ் மண ஓட்டுகளை பற்றி  நண்பர் அதிரடி  ஹாஜா அதிரடியா ஒரு பதிவு போட்டார்.. ####..வாசகர் பரிந்துரையில்  7 ஓட்டுகளை  பெரும் பதிவுகள்  இடம்பெற்றுவருகின்றன....

ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய  ஒரு ஓட்டை தவிர  மீதி ஆறு ஓட்டுகள் அதாவது  6 பேர்  பரிந்துரைக்கும் பதிவு  எப்படி வாசகர் பரிந்துரையில்  இடம்பெறலாம் என்பது  எனக்குள் எழுந்த கேள்வி....


உதாரணத்துக்கு  இப்ப எனக்கு தெரிந்த 10 நண்பர்கள் பதிவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்து  கொள்வோம்...நான் எழுதும் அல்லது என் நண்பர்கள் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் கேரன்டியாக  எங்களின்  10 ஓட்டுகள் விழுந்துவிடும்....அது எவ்வளவு பெரிய  மொக்கையான  பதிவுகளாக இருந்தாலும் கூட...


பட்டிக்காட்டான்  அண்ணாவும் நண்பர்கள் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் ஓட்டு போடுவேன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துருக்கார்.(பின்னூட்டம் -கேபிள்ஜி நீங்க செய்வது நியாயமா?)

அண்ணனுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு FRIEND REQUEST ...அண்ணே, ஏதோ பார்த்து செய்யுங்க. (என்னிடம் ஓட்டு பட்டை இல்லை...உண்மையாகவே இது உங்க நட்புக்காக மட்டுமே)

இந்த நிலை உண்மையா இல்லையா? ....எனக்கும் இந்த முறை பிடிக்கவில்லை ஆனா என்ன செய்ய?...

13 வருஷம் முன்னாடி நான் ஆட்டோ ஓட்டுன நேரம் நண்பன் ஒருத்தன்  புதுசா ஆட்டோ ஓட்ட வரப்போறேன்னு சொன்னான்.அதுக்கு ஒரு மூத்த ஓட்டுனர் கேட்ட முக்கிய  தகுதி  என்ன தெரியுமா?"ஆள் பழக்கம் உண்டா?"..அதாவது ஊர்ல கடைல  காட்டுலன்னு  எல்லார்கிட்டையும் நல்ல பழக்கம் இருக்கணும்.ஆள் தெரிஞ்சிருக்கனும்.

நாப்பது ஆட்டோ நிக்குற ஸ்டாண்டில நம்ம ஆட்டோவை மட்டும் தேடி வருகிற மாதிரி ஆள் பழக்கம் இருந்தா வா வண்டி நல்லா ஓடும்..இல்லைனா கஷ்டம்தான்னு சொன்னாரு.."அக்கு தொக்கு இல்லாதவனுக்குப் பக்க பலம் ஏது?"

கிட்டத்தட்ட அதே கதைதான் இங்கேயும் உங்களுக்கு கொஞ்சம் ஆள் பழக்கமும் அவசியம். அதாவது நட்பு.......ஆனா அப்படியெல்லாம் அமைந்திடுமா என்ன?எனக்கு ஈ எறும்பு கூட பதிவுலகில் தெரியாதுங்க.ஊர்  வட்டாரத்தில் வலைபூவா? அது என்ன கலருன்னு கேட்டு சாகடிக்கிறானுங்க. அப்படினா நானெல்லாம் எப்படி பதிவெழுதி நாலு பேரு படிக்கிறது?

 பஸ்ஸ்டான்ட் ,ரயில் நிலையம்,ஏர்போர்ட் போன்ற இடங்கள்தான் மகுடம்,சூடான இடுகை,வாசகர் பரிந்துரை போன்றவை.அங்கேதான் எல்லோரும் ஏறுவீர்கள் அதுதான் இயல்பு.எவ்வித ஆதரவும் இல்லாமல் வெளிப்புறமாகவும் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன.இயல்பினை காரணம் காட்டி மற்ற புதிய பதிவர்களை காய விடாமல் பதிவுகளை பிடித்திருந்தால் மட்டும்  ஓட்டு போட்டால் நலமாக இருக்கும்.இதற்கு தேவை நேர்மை மட்டுமே.நட்பு அல்ல.

பதிவின் மூலம் நண்பர்கள் உருவாகட்டும்.நண்பர்கள் மூலம் ஓட்டுக்கள் அல்ல.

ஊரெல்லாம் வாழ்கிறதென்று வீடெல்லாம் அழுது புரண்டால் வருமா?ன்னு என் இந்த பதிவிற்க்கு மைனஸ் ஓட்டு போடாம எல்லா ஆட்டோக்களுக்கும் சவாரி ஏற வேண்டுகிறேன்.

முக்கிய குறிப்பு: மேலே படத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் இணையத்தளம் வைத்துள்ளார்.தாஜ் கோரமண்டல் அருகில் உள்ள இவரை அவரது   இணையதள முகவரியில் காணுங்கள்.சென்னையில் உள்ளவர்களுக்கு பயன்படலாம்.தனது தொடர்பு எண்ணையும் அதில் கொடுத்துள்ளார்.(ஏதோ நம்மளால முடிஞ்ச விளம்பர உதவி)