Translate

வெளிநாட்டு வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிநாட்டு வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஆகஸ்ட், 2015

முத்த அதிகாரங்கள் !

நாடு கடந்து,வீடு துறந்து வாழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் சமர்ப்பணம் இக்கவிதை...

இயலா பொழுதொன்றின்
அயல் நாட்டு விலை நிலையில்
கனவாய் விளைகிறது
முத்த அதிகாரங்கள்...

பிறழ்ந்த கை கமழ்த்தி
உதடு குவித்து ஊதி சிரித்து
மழலை பறத்திய 
பறக்கும் முத்தம்...

முக்காலிருட்டில் மூக்கு சிந்தி
விழிநீர் தேக்கி உதடு வடித்த 
உயிர் முட்டும் உரியவளின்
உன்னத முத்தம் ...

கை கடித்து ஊளையிட்டு அழைத்து
எக்கி தொடை பிடித்து முகம் தேடி
நா நக்கி நகல மறுத்த நாயின்
சொல்மொழி இயலா ப்ரிய முத்தம்

உயர்ந்த பனையின் நிழல் முத்தம்
மார்கழி கோலத்து பனி முத்தம்
மழை பேசிய மண் முத்தம்
நீங்கா நிழலாய் நினைவுகள் முத்தம்

உருகி கிடக்கும் உயிரோரம்
ஓராயிரம் முத்தங்கள் ஏங்கி தவிக்குது...
எதிர்காலம் காலாட்டி இளைப்பாற 
ஓடுகிறது  நிகழ்காலம் நிற்காமல்.

ரியாத்களும் டாலர்களும் ஆக்ரமித்த
அரபு தொழிற்சாலை வீதிகளில் 
இயலா பொழுதொன்றின் விலையில்
கனவாய் விரிந்து கண்களை  கரிக்கிறது 
முத்த அதிகாரங்கள்!!!

-அரபு நாடு என்றில்லாது வீடு துறந்து  தனியே தவிக்கும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இது பொருந்தும்.