Translate

பகிங்கர கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பகிங்கர கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

அதிர வைக்கும் ஒரு சிப்பாயின் திறந்த மடல்

ஒரு சிப்பாயின் திறந்த மடல் ......

"உயர்ந்த சிக்ஸ்பேக் தேகம் ...கூரிய கழுகுப்பார்வை ..எந்நேரமும் கையில் துப்பாக்கியோடு வலம் வரும் வீரம்,எதிரிகளை கண்காணிக்கும் கம்பீரம் என ராணுவ வீரர்கள் என்றாலே உங்களுக்குள் ஒரு மிடுக்கான தோற்றம் இருக்கும். ஆனால் அந்த ஆளுமை மிக்க தோற்றத்திற்க்குள் ஒரு மனசு இருக்கு தெரியுமா? அதில் வண்ண வண்ண கனவுகள் இருக்கிறது தெரியுமா? எங்கள் உணர்வுகளின் மீது அதிகாரிகள் வன்முறை பாய்ச்ச இதை தாள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட எங்கள் சக தோழர்களின் வரலாறு தெரியுமா?எங்கள் வலியை அடித்தட்டு வரை மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் நக்கீரன் மூலமாக பேசுகிறோம் ..ஆம் ஒரு துணை ராணுவ சிப்பாயின் திறந்த மடல்தான் இது.

"ஆசியாவிலேயே மிகப்பெரிய வெற்றிகரமான படை எங்க CRPF (CENTRAL RESERVE POLICE FORCE) எனும் துணை ராணுவம் .நாடு முழுக்க சுமார் ரெண்டு லட்சம் பேர் பணி புரிகிறோம்.

DIRECTOR GENERAL எனும் DG, IG,DIG,ADIG,COMMANDANT,DEPUTY COMMANDANT,ASSISTANT COMMANDANT,INSPECTOR,SUB INSPECTOR,HEAD CONSTABLE,CONSTABLE என படி நிலையில் பொறுப்புகள் இருக்கும்.எல்லா துறைகளையும்  போலவே கடை நிலையில் இருப்பவன்தான் கஷ்டப்படுவான்.

நான் காஷ்மீர்,வட கிழக்கு மாகாணாங்கள்,நக்சல் எதிர்ப்பு கோப்ரா என பெரும்பாலான ஆபரேசன்களில் இருந்திருக்கிறேன்.பனி,மழை,வெயில் என மாறி மாறி சீதோஷ்ண நிலையில்தான் எங்கள் பணி.ஜார்கண்ட்,சட்டீஸ்கர் போன்ற அடர்ந்த காட்டுக்குள் போகும் போது திகில் பரவும்.கோப்ராவில் இருந்த போது தொடர்ந்து ஆறு நாட்கள் கொஞ்சம் கூட கண் அசைக்காமல் எதிரிகளை தேடி பயணித்த அனுபவமெல்லாம் இருக்கு. ஜி.பி.எஸ் மட்டும் கையில வைச்சு வாட்ச் பண்ணிகிட்டே போவோம்.இரண்டு இரண்டு பேராக ஒரு பாயிண்டில் இருந்து கண்காணிப்போம்.ஒரு ஆள் படுப்பார்.அவர் முழித்ததும் மறு ஆள் படுத்து விட,இவர் கண்காணிப்பார்.இப்படித்தான் வேலை நடைமுறை இருக்கும்.

அடர் காட்டில் வித்தியாசமான பூச்சிகள்,விலங்குகள் தொந்திரவு இருக்கும்.இவை கடந்து பின்பாய்ன்ட் (எதிரிகள் இருக்கும் இடம்) தொட்டதும் ரவுண்டப் செய்து பயர் செய்வோம்.இதுல எங்க கண்ணெதிரிலேயே சக தோழர்கள் குண்டடிப்பட்டு வீழ்வதை பார்த்திருக்கிறோம்.அழுவதெற்க்கெல்லாம் நேரமில்லை.தொடர்ந்து எதிரிகளை நோக்கி பயர் செய்வோம்.ஒரு முறை அப்படித்தான் ஓடிக்கொண்டே பயர் செய்து கொண்டிருக்கும் போது திரும்பி பார்க்கிறேன்.என் நண்பன் வலது கை கக்கத்தில் எதையோ பிடித்துக்கொண்டே ஏ.கே கன்னால் சுட்டுக்கொண்டே செல்கிறான்.உற்றுப் பார்த்தால் அது அவனோட மற்றொரு கை.அப்புறம்தான் பார்க்கிறேன் அவனின் இடது கை கண்டடிப்பட்டு பிய்ந்து போய் விட்டது.

முக்கிய ஆபரேஷன்கள் அனைத்திற்கும் எங்களைப் போன்ற கடை நிலை சிப்பாய்களைத்தான் முன்னால் அனுப்புவார்கள்.....உயரதிகாரிகள் பின்னாடி வெகு தொலைவில்தான் வருவார்கள்.குண்டு பட்டால் முதல் பலி நாங்கள்தான்.ஆனாலும் சொந்த நாட்டுக்காக செத்தால் நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் பெருமைதானே என்று ஆர்வமாக முன்னால் போவோம்.காட்டில் அட்டாக் நடந்து கொண்டே இருக்கும்.அந்தக் களத்திலும் சில சிப்பாய்களை வாட்டர் பாட்டில்,ஸ்நாக்ஸ் சுமந்து வரச்சொல்லி எடுபிடி வேலை வாங்குவார்கள் அதிகாரிகள்.அட்டாக்கிற்கு செல்லும்போது அதிகாரிகள்,தோள்பட்டையில் உள்ள தங்களுடைய ஸ்டார்களை கழட்டி விடுவார்கள்.ஏனெனில் நக்சலைட்டுகள்,ஸ்டார்களை பார்த்துதான் எப்பொழுதும் சுடுவார்கள்.அதாவது அதிகாரிகளைத்தான் குறி வைப்பார்கள்.இதி சோகம் என்னவென்றால் சில சமயம் சிப்பாய்களுக்கு ஸ்டார் மாட்டி விட்டு அனுப்பி விடுவார்கள்.இப்படி பலியான சிப்பாய்களும் உண்டு.

காட்டுல கண்காணிக்கும்போது அனுமதிக்கப்பட்ட நாளில்தான் செல்போன் யூஸ் ஆகும்.அந்த நாளிலும் டவர் இருக்காது.டவருக்காக மிக உயர்ந்த இடத்திற்குச் சென்று உயர்த்தி பிடித்தால் சில சமயம் ஒரு பாய்ண்ட் டவர் வரும்.அப்போ ஸ்பீக்கர் போன் போட்டு பேசுவோம்.காத்துல குரல் கர கரன்னு வரும்.ஆனா அந்த சமயத்துல என் குழந்தை "அப்பா...அப்பா..."ன்னு கூப்பிடும்போது அங்கேயே சொர்க்கத்தைப் பார்த்த மாதிரி அப்படி ஒரு ஆனந்தம் வரும்.நிமிடக்கணக்கில்தான் பேச முடியும்.அதற்குள் அடுத்த அடுத்த சிப்பாய்களுக்கு வழிவிடணும்.எங்களின் எந்த வேதனையையும் உயரதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள்.ஒரு சில அதிகாரிகள்தான் நல்ல அதிகாரிகளா இருப்பாங்க.

விஜயகுமார் சார் அப்படிப்பட்டவர்தான்.டி.ஜியா அவர் இருந்தபோது அடிக்கடி வந்து சாதாரண சிப்பாய்களிடம் நலம் விசாரிப்பார்.எங்கள நல்லா பார்த்துக்குவார்.ஏதாவது குறை இருக்கான்னு கேட்பார்.அந்த மாதிரி சமயத்தில் குறையை சொல்லிட்டோம்னா அவ்வளவுதான்.அவர் போன பின்கீழுள்ள அதிகாரிகள் எங்களை "குவாட்டர் கார்ட்" எனும் துப்பாக்கி ஆயுதக் கிடங்கில் பாதுகாப்புக்கு போட்டு விடுவார்கள்.பெரும்பாலும் நக்சல்,உல்பா போன்ற குழுவினர் ஆயுதக்கிடங்கைத்தான் முதலில் குறி வைப்பார்கள்.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? ஓய்வில்லாத கடுமையான வேலைகள்,குடும்பத்தை பார்க்காத கவலை, அதை விட அதிகாரிகளின் டார்ச்சரால் மன அழுத்தமாகி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தவர்கள் எங்களில் அதிகம்.2002-2009 வரையில் காஷ்மீரில் எங்கள் படையினர் 169வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர்.மற்ற இடங்களில் எவ்வளவு இருக்கும்ன்னு நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.காட்டில் நான்கு வருடம் இருந்தால் 'சாய்ஸ் போஸ்டிங் ' என்று ஒன்று தருவார்கள்.அதில் நாம் சொந்த மாநிலத்துக்கு வரலாம்.அங்கு கவர்னர்,அரசியல்வாதிகளுக்கு எஸ்கார்ட்ஸ் போன்று டூட்டி போடுவார்கள்.அப்படி பூந்தமல்லியில் இருக்கும் எங்க 77-பட்டாலியனில் சில ராஜ்பவனில் ஆளுநர் மாளிகையில் பணிக்கு வருகிறோம்.அங்குள்ள கொடுமைகள் ஆபரேசனில் ஈடுபட்டதை விட வலிக்குது.

இங்கு கேரளா மாநிலத்தை சேர்ந்த கமாண்டன்ட் எஸ்.ராதா கிருஷ்ணன்,செகண்ட் கமாண்டன்ட் பி.கே.பிள்ளை,துணை கமாண்டன்ட் ஜின்சி பிலிப்ஸ் கொடுக்கும் டார்ச்சர்கள் மிக அதிகம்.2008-ஆம்  ஆண்டு சட்டப்படி நாலு கான்ஸ்டபிள்,ஒரு ஹெட் கான்ஸ்டபிள் கொண்டதுதான் ஒரு கார்டு.(GUARD). ஆனா எப்போதும் 3 ப்ளஸ் 1 கார்டுல நிறுத்துறாங்க.ஒரு நாளைக்கு நாலுமணி நேரம் டியூட்டி.அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் ரெஸ்ட்.அதன்பின் நாலு மணி நேர டியூட்டி....என லீவே இல்லாமல் தொடரும்.இந்தம் ஓய்வு நேரத்திலும் அதிகாரிகள் அவங்களுடைய வீட்டு வேலைகளுக்குத்தான் எடுபிடியா பயன்படுத்துவாங்க.அவங்க மனைவி, பிள்ளைகள் சொல்ற வேலையெல்லாம் செய்யணும்.சொல்லவே கஷ்டமா இருக்கு.பல ஆபரேசன்களில் எதிரிகளை சுட்டு கம்பீரமாக வருவோம்.ஆனா இங்கு அதிகாரி வீட்டுப்பெண்கள் துணியை துவைக்கும்போது கூசிப்போயிடும்.

அரசு வண்டிலதான் அவங்க புள்ளைங்க ஜிம்முக்கு,காலேஜ்க்கு கூட்டி போறோம்.அதுல போனாத்தான் கெத்தாம்.இதுக்கு லாக் புக்ல(LOG BOOK) டியூட்டி நிரப்புறதுக்கு பொய்யான டியூட்டிய எஸ்.ஐ நிரப்பிக்குவாங்க.இது இல்லாம இவங்க சொந்த பந்தங்க யார் வெளியூரில் இருந்து வந்தாலும் அவங்க சொல்ற எல்லா வேலையும் செய்யணும்.சின்ன சின்ன பசங்க இருந்தா தோட்டத்துல வேலை செய்ற எங்க மேல கல்லை தூக்கிப் போட்டு விளையாடுவாங்க.இங்க சொந்த மாநிலம் வந்தும்,எங்க பொண்டாட்டி புள்ளைங்கள பார்க்க முடியல.லீவ் கிடைக்கிறது இல்லை.ஒரு அடிமையை விட மோசமாக நடத்துகிறார்கள்.

எங்களுக்கு காஸ்மீர் ,நக்சல்,வட கிழக்கு தீவிரவாதிகளை விட இந்த அதிகாரிகள்தான் பயங்கரமாக தெரிகிறார்கள்.மன அழுத்தம் அதிகமாகி மன நல மருத்துவரை தேடி போய்க்கொண்டு இருக்கிறார்கள் எங்கள் சக சிப்பாய் தோழர்கள் பலர்.பூந்தமல்லியில் ஒருவர் மன அழுத்தத்தில் மன நோயாளியாகவே ஆகிவிட்டார்.சமீபத்தில் கூட [பூந்தமல்லி கோர்ட் வளாகத்தில் சட்டைய கிழித்துக்கொண்டு கத்தினார்.

எதற்காக ஆயுதம் தூக்கி போராடுகிறோம்?நாட்டின் இறையாண்மை காக்கவும்,நாட்டு மக்கள் சுதந்திரமான குடிமகனாக வாழ்வதாகவும் தானே.நாட்டுக்காக உழைக்கவும்,அதற்காக மடியவும் தயார்தான்.ஆனால் அதிகாரிகளுக்காக சுயமரியாதையையும் ,சுதந்திரத்தையும் இழந்து வாழ வேண்டுமா?நாங்கள் கேட்பது நல்ல ஓய்வு,எங்கள் குடும்பங்களை சந்திக்க வாய்ப்பு.அதை விட முக்கியம் எங்களை சுயமரியாதையோடு நடத்தும் விதமே.

ஜனவரி-26 வெள்ளையர்களின் அடிமைத்தனத்தை ஒழித்து நம் நாடு குடியரசான நாள்.இதை கொண்டாடும் அதே நாட்டில்தான் நாட்டுக்காக உழைக்கும் நாங்கள் அதிகாரிகளால் தொடர்ந்து அடிமைகளாகவே நடத்தப்பட்டு வருகிறோம்.

எங்கள் அடிமை விலங்குகள் நக்கீரனின் மூலம் குமுறிய பிறகாவது உடையுமா?

அதிகாரிகளே ...இதை உங்கள் மீது 'புகார்'க் குண்டுகளாக பார்க்க வேண்டாம்...எங்கள் நியாயங்களை உணரும் கண்ணீர்க்கடிதமாக பாருங்கள் ......

எழுத்து -சே.த.இளங்கோவன்
நன்றி-நக்கீரன்

ஒரு சக சிப்பாயாக இதனை பகிர்கிறேன்.எமக்கான குரலை இங்கு நாங்கள் எடுத்து வைத்ததே மிகப்பெரிய விடயமாகும்.சங்கங்கள் இல்லாது சட்டங்கள் தெரியாது தவிக்கும் சிப்பாய் ஜாதியை மனித உரிமை குழுக்கள்,ஊடகங்கள் மட்டுமே வெளியுலகுக்கு எடுத்து சொல்லி காப்பாற்ற முடியும்.பூனைக்கு எலிதான் மணி கட்டணும்னு இல்லையே... ஏனெனில் நீங்கள் எலிகள் அல்லவே.

கருத்துக்களை வரவேற்கிறேன்.இந்த எமது குரலை எடுத்து செல்லுங்கள்....

எங்கேனும் ஒலிக்கட்டும் பூனைக்கு மணியாக.நன்றி.