Translate

சாதி பெருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி பெருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 அக்டோபர், 2012

புறந்தள்ள வேண்டுமா சுந்தரப்பாண்டியனை?

சமீப காலமாக திரைப்படங்கள் தொலைத்த ஒரு கருமத்தை மறுபடியும் தேடி தந்துள்ளது சுந்தரப்பாண்டியன் திரைப்படம்.

சில குறிப்பிட்ட தலைவர்களை குறிப்பிட்ட ஜாதியின் தலைவர்களாகவே நம்பும் நம்ப வைக்கப்படும் தமிழ் சமுதாயத்தில் அதை மேலும் மேலும் வளர்த்து விடுவதும் ஒரு தனி களை(கலை?).அதை சிறப்பாக செய்துள்ளது சுந்தரப்பாண்டியன் திரைப்படம்.

இந்த படத்தின் பெயரே சற்று உறுத்தலாக உள்ளது என்று சொன்ன மனைவி பேச்சை மீறி படத்தை பார்க்க ஆரம்பித்த உடனேயே ஊர்ப்பெருமை அறிமுகம் ஆகிறது.பின்னணி குரல் ஊர்ப்பெருமையை சொல்லும் அதே நேரம் காட்சிகள் சாதி பெருமையை தூக்கிப் பிடிக்கின்றன.உசிலம்பட்டியில் வேறு போஸ்டர்களுக்கு இடம் இல்லியாம் கார்த்திக்கும் பிரபுவும் மட்டும்தான் நாயகர்களாம். 

நான் கொஞ்சம் ஜெர்க்காகி உசிலம்பட்டி நண்பனுக்கு போனை போட்டால் இல்லை மாப்ளே எங்க  ஊர்ல அப்படில்லாம் இல்லை.படம் எடுத்தவன் அவன் சாதி பெருமையை காட்டதுக்கு அப்படி வைச்சிருக்கலாம் என்றான்.அப்படியும் இருக்குமோ?ஏன் இந்த சாதி வெறி?

கார்த்திக்கும் பிரபுவும் இவர்களின் பிடித்த ஹீரோக்களாம். ஏன் அப்படி ஊர்ல உள்ள மத்த ஹீரோக்களை விட இவங்களுக்கு பிடிக்கும்னா சாதிப் பாசம்னு சொன்னா சரியா?பாசம் இருக்கட்டும் ...அதை தமிழ நாடு மொத்தமும் பரப்புர அளவுக்கு இந்த படத்தில என்னதான்  அவசியமோ?

எங்க ஊர்ல இப்படி கதாநாயகனை சாதி பிரித்து அவனுங்களுக்கு  வால்போஸ்டர்  அடித்தே பல சண்டைகள் சாதி கலவரமாக மாறி உள்ளன.இப்போதான் கொஞ்ச வருசமா MR  கார்த்திக்கையும் பசும்பொன் பிரபுவையும் சற்று மறந்த நேரமா பார்த்து  ஏன் இந்த கொலை வெறி?(இப்பலாம் கல்யான் ஜுவல்லரி பிரபுனுதான் பேர்)

தேசத்துக்கு தந்தை காந்திதான் என்றாலும் இவங்களுக்கு நேதாஜிதான் பிடிக்குமாம்.கூடவே தேவர்  படமும் சேர்ந்து காட்டப்படுகிறது.நேதாஜியை தேவர் சாதியாக மாற்றின பெருமையை நான் கண்ணாராக கண்டுள்ளேன்.அதுக்கு காரணம் இது போன்ற அறிமுகங்களும் போஸ்டர்களும்..

எனது தம்பியின் பெயர் நேதாஜி.கலவர காலத்தில் எனது பள்ளி பருவத்தில் பாளையம்கோட்டை முருகன் குறிச்சி(வீரங்க ஏரியாவாம் ) பஸ் ஸ்டாப்பில் என் தம்பியின் பெயர் கேட்ட சிலர் "நேதாஜி" என்றதும் எலேய் இவன் நம்மாளுடா என்று உருகி கொண்டார்கள்.என் தம்பி வீட்டில் வந்து கேட்கிறான் நேதாஜி என்னாளும்மா?(அவர் என்ன சாதிப்பா?யாராவது சொல்லிடுங்க ப்ளீஸ்)

இதற்கு காரணம் என்ன? நேதாஜியை சாதி பட்டியலில் இணைத்து கார்த்திக்கோடும் தேவரோடும் போஸ்டர் அடித்தது காணாது என்று .இப்போது சினிமாவிலுமா?

பாசமும் கோபமும்  என்று குரல் ஒலிக்கும்போது தேவர் அய்யாவை ஜூம் செய்த காமிராக்கள் காமராஜர்,வ உசி ,அம்பேத்கார்,இப்படி யாரையும் காட்டாமல்  குருடான காரணம் என்ன? என்ன சொல்ல விரும்புகிறது படம்?நட்பும் துரோகமும் ?இதிலே இந்த வரலாறுக்கும் காட்சிகளுக்கும் அவசியம் என்ன வந்தது? பெருமை பேசி பெருமை பேசி இளம் ரத்தங்களை தூண்டிவிட்டு எதை சாதிக்க நினைக்கிறீர்கள்?

இங்கே பெண் பிள்ளைகளை காதல் அது இதுன்னு மனசை கெடுத்தா (விரல் சூப்ப தெரியாத பச்சை பிள்ளைங்க பாருங்க) கள்ளிக்காட்டுல கொலை செய்து போட்டுவிடுவார்களாம். கவுரவ கொலைகளை எவ்வித வெட்கமும் இன்றி பெருமையாக அறிமுகம் செய்கிறது இந்தப்படம்.அப்பா இல்ல நான் மட்டும்தான் வீட்டை காப்பாற்றணும் என்னும் வாலிபனை இரக்கமே இல்லாமல் குல கவுரவம் என்று கொன்று போடும் வக்கிர கவுரவ கொலைகளை எவ்விதத்திலும் ஒத்து கொள்ளவே முடியாது.ஆனால் அதை நியாயப்படுத்தும் குரலாகவே பெருமைப்படுத்தும் குரலாகவே  ஒலிக்கிறது சுந்தரப்பாண்டியன்.

இந்த தேவை இல்லாத அறிமுகம் இல்லாமலேயே படத்தை படைத்திருக்கலாம்.யாரை விட்டது சாதி? தேவர் மகன்,பசும்பொன்,கவுண்டர் வீட்டுப் பொண்ணு,சின்னக்கவுண்டர்,என்று பல படங்கள் தேவையே இல்லாமால் சாதிகளை தூக்கி திரிவதன் மர்மம் என்ன?

எந்த ஒரு மனிதனுக்கும் தான் செய்யும் தவறுகளை பெருமைப்படுத்தி காட்டும் சினிமாக்களை புறம் தள்ளி ஒதுக்கும் பழக்கம் அவசியம் வேண்டும்.தேவர் சாதி என்றால் இப்படிதான் என்று கவுரவ கொலைகளை காட்டும் இந்த திரைப்படத்தை தேவர் சாதியினரே பெருமையாக பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? வலையுலகத்தின் விமர்சனங்களில் இதை பற்றி எதுவும் பேசாமல் படத்தை மட்டும் பேசி மௌனமாக சென்றதன்  காரணம் என்ன? ஊர் வம்பு வேண்டாம் என்றா?ஹிட்ஸ் பாதிக்கும் அபாயமா?

பத்திரிகைகளில் சாதி பற்றி பேசவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கவுரவ கொலைகளின் வசனங்களை கூட  கண்டிக்காமல் மறந்த மர்மம் என்ன?கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 12 கவுரவ கொலைகள் நடந்துள்ளதாக ஆகஸ்ட்டில் எவிடென்ஸ் அமைப்பின் கதிர் தெரிவித்துள்ளார்.கவுரவ கொலைகளை  பற்றிய குற்ற உணர்ச்சிகளை உருவாக்காமல் வரும் இது போன்ற படங்கள் தொடர்ந்து வரும் பட்சம் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.

ஆதிக்க சாதிகளின் இப்படிப்பட்ட படங்கள் அந்த சாதிக்குள்ளேயே இருக்கும் பல நல்ல உள்ளங்களை கூட சாதி பெருமையை கிளறி விட்டு இன்னொருவனை கீழ்த்தரமாக பார்க்கத் தூண்டும் என்றால் மிகையில்லை.ஏற்கனவே அப்படி இருக்கும் நெஞ்சங்களுக்கு இது பூஸ்ட் என்றுதான் சொல்லணும்.

திருநெல்வேலினா முதுகுல அருவாவை சொருகிட்டு திரிவாங்க என்று முட்டாள்தனமாக காண்பித்த யோசிக்க வைத்த  ஹரியை போலத்தான் இருக்கிறது சுந்தரப்பாண்டியன். அறிமுக காட்சிகளுக்காகவே புறந்தள்ள வேண்டிய திரைப்படம் சுந்தர பாண்டியன்.

இது குறித்து விமர்சனங்களை தேடும் போது வினவு மட்டுமே சுந்தரப்பாண்டியனுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.மிக விரிவாக சுந்தரப்பாண்டியனை தோலுரிக்கும் அந்தப் பதிவை படிக்க இங்கே சுட்டுங்கள்

குறிப்பு: இல்லை இல்லை எங்க ஜாதி நாங்க எப்படினாலும் எடுப்போம் வேணும்னா பாரு இல்லைனா மூடிட்டு போ ன்னு சொன்னால் ......சுந்தரப்பாண்டியன் தலைப்பில் பாண்டியன் என்ற பெயரை எடுத்து விட்டுதான் படம் எடுக்க வேண்டியிருக்கும்.வினவு விமர்சனத்தின் மறுமொழிகளில் இதற்கான காரணங்களை காணலாம்.

என்ன பதிவுக்கு படமே இல்லை என்று பார்க்கிறீங்களா? இப்படி ஒரு படத்துக்கு எழுதுற பதிவுக்கு அது  ஒன்றுதான் கேடு?